கோடையை குளுமையாக்கும் கேக்சிக்கில்ஸ்

சுவையான கேக்சிக்கில்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பாப்சிக்கில்ஸ் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

Update: 2023-04-30 01:30 GMT

கேக்சிக்கில்ஸ்

தேவையான பொருட்கள்:

கேக் (உங்களுக்கு விருப்பமானது) - 2 கப்

பட்டர் கிரீம் - 3 டேபிள் ஸ்பூன்

வெள்ளை சாக்லெட் - 1 கப்

சிலிக்கான் மோல்டு - 1

ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லெட்டை கொட்டவும். அதைவிட சற்று பெரிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சாக்லெட் இருக்கும் பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுப்படுத்தவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருகியதும் அதை ஆறவைக்கவும்.

சிலிக்கான் மோல்டை ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக துடைக்கவும். பின்பு அதில் உருக்கிய வெள்ளை சாக்லெட்டை 3 டீஸ்பூன் ஊற்றி, எல்லா பக்கமும் படியுமாறு மெதுவாக சுழற்றவும்.

பின்னர் ஐஸ்கிரீம் குச்சிகளை உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து மோல்டின் நடுப்பகுதியில் நுழைக்கவும். இது செட் ஆவதற்காக 10 முதல் 12 நிமிடங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

இப்போது கேக்கை தூளாக உதிர்த்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் சிறிது சிறிதாக பட்டர் கிரீமை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் மோல்டை வெளியே எடுக்கவும். தயாரித்து வைத்திருக்கும் கேக் கலவையை, மோல்டில் இருக்கும் வெள்ளை சாக்லெட் மீது நிரப்பவும். பின்னர் அதன் மீது சிறிதளவு உருக்கிய வெள்ளை சாக்லெட்டை ஊற்றவும். (சாக்லெட் இறுகி இருந்தால் சில நிமிடம் மறுபடியும் சுடுநீரில் வைக்கவும்.)

மீண்டும் 12 முதல் 15 நிமிடங்கள் வரை மோல்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும். இப்போது சுவையான கேக்சிக்கில்ஸ் தயார்.

ஸ்ட்ராபெர்ரி பாப்சிக்கில்ஸ்

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 2 கப்

சர்க்கரை - ¾ கப்

தண்ணீர் - ½ கப்

பாப்சிக்கில் மோல்டு - 1

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதில் இருந்து 5 அல்லது 6 துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதம் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளுடன் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

பாப்சிக்கில் மோல்டில் தனியாக எடுத்து வைத்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போடவும். அரைத்த கலவையை அதன் மேலே ஊற்றி நிரப்பவும். இதை 3 மணி நேரம் பிரீசரில் வைக்கவும்.

பிறகு மோல்டில் இருந்து எடுத்தால் 'ஸ்ட்ராபெர்ரி பாப்சிக்கில்ஸ்' தயார்.

Tags:    

மேலும் செய்திகள்

போபா டீ