பாரம்பரிய உணவால் குணமான அனுராதா

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய வகையில் முடக்கத்தான், வல்லாரை, முருங்கை, பிரண்டை உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் சிறு தானியங்களைக் கொண்டு சூப், சாதப்பொடி, சத்து உருண்டைகள் என 55 வகையான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

Update: 2022-08-21 01:30 GMT

பாரம்பரிய உணவுகளை மறந்துவிட்டு, பாஸ்ட் புட் சுவைக்கு அடிமையானதன் விளைவாக பல்வேறு நோய்களை அனுபவித்து வருகிறோம். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பைக் கோளாறுகள், நீர்க்கட்டி, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஆகிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உணவுப் பழக்கமும் முக்கியமான காரணமாகும்.

அவ்வாறு, கருப்பை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த அனுராதா, தனது தாத்தாவிடம் கற்றுக்கொண்ட மூலிகை மருத்துவத்தைப் பின்பற்றி, தன்னுடைய உணவு முறையில் மாற்றங்களை ஏற்

படுத்தினார். அதன் பயனாக அவரது உடல் நலம் சீரானது. இப்போது அவரது சிறப்பு உணவு தயாரிப்பை, மற்றவர்களுக்கும் பலன் தரக்கூடிய வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளார்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய வகையில் முடக்கத்தான், வல்லாரை, முருங்கை, பிரண்டை உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் சிறு தானியங்களைக் கொண்டு சூப், சாதப்பொடி, சத்து உருண்டைகள் என 55 வகையான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தனது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

பாரம்பரிய உணவு தயாரிப்பைத் தொழிலாக செய்யும் எண்ணம் ஏற்பட்டது எப்படி?

'உணவே மருந்து' என்பது என் நம்பிக்கை. என் தாத்தா நாராயணசாமி நாட்டு மருந்து வைத்தியராக இருந்தவர். மூலிகைகள், கீரை வகைகள் பற்றி பல விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். அதனால் இயற்கையான வழியில் மூலிகைகள் மற்றும் கீரைகளைச் சாப்பிட்டு எனது உடல்நலப் பிரச்சினையை குணப்படுத்தினேன்.

அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களின் ஆரோக்கியப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் மூலிகைகள் பற்றிச் சொல்லும்போது, அதை சாதப்பொடி, சாம்பார் பொடி, சூப் பவுடர் போன்று தயாரித்து தர முடியுமா? என்று கேட்டார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் எனது தொழில்.

இதற்கான மூலிகைகளை எவ்வாறு பெறுகிறீர்கள்?

மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வயலுக்கு களை எடுக்கச் செல்லும் பெண்கள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களிடம் இருந்துதான் மூலிகைச் செடிகளை வாங்குகிறோம். சிறுதானிய வகைகளை, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இருந்து பெறுகிறோம்.

சிறுதானியங்கள் மற்றும் மூலிகைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

முடக்கத்தான், முருங்கை, பிரண்டை, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, தூதுவளை ஆகியவை எல்லாமே ஒரு காலத்தில் நாம் உணவாக அன்றாடம் சாப்பிட்டவை. அதைத்தான், இப்போதுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் சாப்பிடக்கூடிய சுவையான உணவுப் பொருட்களாக தயாரித்துத் தருகிறேன். சிறுதானியங்களையும், மூலிகைகளையும் தனித்தனியாக சாப்பிடுவதை விட, முடக்கத்தானுடன் மாப்பிள்ளை சம்பா, பிரண்டையுடன் வரகு, சாமையுடன் முருங்கைக்கீரை ஆகியவற்றை கலந்து மாவு தயாரித்து தோசையாக சாப்பிடலாம்.

பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு, பலரும் தங்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாராட்டுவது பெருமையாக இருக்கிறது, என்கிறார் அனுராதா. 

Tags:    

மேலும் செய்திகள்

போபா டீ