தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் வழிகள்
தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானமே இதை நடைமுறைபடுத்துவதற்கான சிறந்த வழி. நீங்கள் எவ்வளவு நேரம் கைப்பேசியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.;
உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான நேரத்தில் தூங்குவது முக்கியமானது. தூங்கச் செல்வதற்கு முன்பு கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்துதல் நேரத்தை வீணாக்குவதோடு கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். கைப்பேசியை பலரும், தூங்கப் போகும் நேரத்தில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானமே இதை நடைமுறைபடுத்துவதற்கான சிறந்த வழி. நீங்கள் எவ்வளவு நேரம் கைப்பேசியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். எந்த செயலியை அதிகம் பயன்படுத்துகிறீர்கள், எத்தனை முறை உங்கள் கைப்பேசியை திறக்கிறீர்கள் என்பதை அறிய, கைப்பேசியின் செட்டிங்ஸ்-சில் டிஜிட்டல் வெல்பீயிங்-ஐ கிளிக் செய்து துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் தேவைக்கு அதிகமாக நீங்கள் பயன்படுத்தும் செயலியை கண்டறிந்து பயன்பாட்டைக் குறைக்கலாம். இந்த டிஜிட்டல் வெல்பீயிங் அமைப்பில் உள்ள 'ஆப்ஸ் டைமர்' மூலம் ஒரு செயலியை இவ்வளவு நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என நேரக்கட்டுப்பாடு அமைக்க முடியும். இது குறிப்பிட்ட செயலியை அதிகம் பயன்படுத்துவதை தடுக்க உதவும்.
இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கைப்பேசி பயன்பாட்டைத் தவிர்க்க கடிகாரத்தில் அலாரம் 'செட்' செய்யலாம். கடிகார அலாரம் அடித்த பின்பு கைப்பேசி பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் உங்கள் கைப்பேசியில் செட்டிங்ஸ்-சில் 'நைட் மோட்' என்ற அம்சத்தை 'கிளிக்' செய்து தூங்கப் போகும் நேரத்தை செட் செய்துவிட்டால், நீங்கள் தூங்க வேண்டிய நேரத்தில் கைப்பேசி பயன்படுத்திக் கொண்டிருந்தால், கைப்பேசி திரையின் வண்ணம் மாறி, 'இது தூங்க வேண்டிய நேரம்' என்பதை நினைவூட்டும்.
நீங்கள் தூங்க சென்றுவிட்டாலும், கைப்பேசியில் அவ்வப்போது வரும் நோட்டிபிகேஷன்கள் உங்களை மீண்டும் கைப்பேசியை பயன்படுத்த தூண்டலாம். இதைத் தவிர்க்க டிஜிட்டல் வெல்பீயிங்கில் உள்ள 'பெட் டைம் மோட்' என்ற அம்சம் பயன்படும்.
கைப்பேசியிலிருந்து வெளியாகும் நீல ஒளி அலைகள், இரவு நேரங்களில் கண் பார்வையையும் தூக்கத்தையும் அதிகம் பாதிக்கும். இதனைத் தவிர்க்க பயன்படுத்தும் கைப்பேசியை படுக்கும் இடத்தில் இருந்து கைகளுக்கு எட்டாத தூரத்தில் வையுங்கள் அல்லது படுக்கை அறைக்கு வெளியே வையுங்கள். இதன் மூலம் தூங்கும் போது கைப்பேசியை பயன்படுத்தும் ஆர்வத்தைக் குறைக்க முடியும்.