வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வழிகள்

தரையை ‘மாப்’ கொண்டு சுத்தப்படுத்திய பின்னர், வாரம் ஒரு முறை தண்ணீரில் கல் உப்பைக் கரைத்து துடைக்கலாம். குறிப்பாக, சமையல் அறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை ஆகியவற்றில் இதைக் கடைப்பிடிப்பது நல்லது.

Update: 2022-10-02 01:30 GMT

ல்லத்தில் நிலவும் 'நேர்மறை ஆற்றல்' மனதில் புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கி, ஆக்கப்பூர்வமான சக்தியை அதிகரிக்கும். அதனால், அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். அத்தகைய நேர்மறை ஆற்றலை வீட்டில் எளிதாக உருவாக்க சில டிப்ஸ்…

வீட்டின் தலைவாசலுக்கு முன்பு தினமும் தண்ணீர் தெளித்து துடைத்து, கோலமிடுவதும், மாலை நேரங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் நேர்மறை சக்திகளை எளிதாக வீட்டுக்குள் வரவழைக்கும்.

உபயோகமில்லாத மற்றும் தேவைக்கு அதிகமாக இடத்தை ஆக்கிரமிக்கும் பொருட்கள், உடைந்த பொருட்கள், கிழிந்த துணிகள், இயங்காத மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள் ஆகியவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்.

தினமும் காலையில் ஜன்னல்களை நன்றாக திறந்து வைத்து, இயற்கை காற்றும், வெயிலும் உள்ளே வருமாறு செய்யுங்கள். காலையில் எழுந்து குளித்த பின்னர் நறுமணம் தரும் ஊதுபத்திகளை சமையல் அறை மற்றும் ஹால் பகுதிகளில் ஏற்றி வைக்கலாம்.

வீட்டிற்குள் இருக்கும்போது காலணிகள் அணியாமல் நடப்பது நல்லது. தரையில் பாதம் பதியும்போது, எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்வதால், உடலில் 'ஆற்றல் சமநிலை' உண்டாகும்.

வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழையும் முன்பு, காலணிகளை தலை வாசலுக்கு வெளிப்புறமாக விட வேண்டும். கை, கால்களை நன்றாகக் கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்வது நல்லது.

வீட்டின் மேல்மாடி, தோட்டம், பால்கனி மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் தினமும் அரைமணி நேரம் உடலில் வெயில்படுமாறு நடக்க வேண்டும். சூரிய வெப்பம் நமது உடலின் செயல் திறனைத் தூண்டி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

தரையை 'மாப்' கொண்டு சுத்தப்படுத்திய பின்னர், வாரம் ஒரு முறை தண்ணீரில் கல் உப்பைக் கரைத்து துடைக்கலாம். குறிப்பாக, சமையல் அறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை ஆகியவற்றில் இதைக் கடைப்பிடிப்பது நல்லது.

வீட்டில் ஆங்காங்கே தொட்டிகளில் பசுமையான செடிகளை வளர்ப்பது, வண்ண மீன்கள் வளர்ப்பது ஆகியவையும் நேர்மறை சக்திகளை நிலைநிறுத்தச் செய்யும்.

மனதை அமைதிப்படுத்தும் நேர்மறை சக்திகளை ஈர்க்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு களில் அவ்வப்போது ஈடுபடுங்கள். அதன் மூலம் உங்களுக்குள் உருவாகும் நேர்மறை ஆற்றல் இல்லத்தில் பரவுவதை உணர முடியும்.

எப்போதும் கழிவறையைச் சுத்தமாக பராமரியுங்கள். உபயோகிக்காத நிலையில் கழிவறை கதவுகளை மூடி வைக்க வேண்டும். படுக்கை எப்போதும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருப்பது அவசியம். அழுக்கான விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை பயன்படுத்த வேண்டாம்.

வாரம் இருமுறை எறும்புகள் உண்பதற்காக பச்சரிசி மாவில் நாட்டுச் சர்க்கரை கலந்து வீட்டின் ஒதுக்குப்புறமாக தூவி விடுங்கள். நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு உணவு அளித்த திருப்தி நேர்மறை ஆற்றலாக மலரும். 

Tags:    

மேலும் செய்திகள்