கைவிடப்பட்ட அணில் குட்டிகளை பராமரிக்கும் வழிகள்
மரத்தில் இருக்கும் கூட்டில் இருந்து கீழே விழும் அணில் குட்டிகளுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றால், அவற்றை அதன் தாயுடன் சேர்ப்பதே சிறந்த வழியாகும். தாய் அணில் நிச்சயமாக தன்னுடைய குட்டிகளைத் தேடி திரும்ப வரும்.;
இயற்கை சூழலில் மரங்களிலும், பொந்துகளிலும் வாழ்பவை அணில்கள். சில நேரங்களில் வீட்டின் பரண், ஏ.சி. இயந்திரம் போன்றவற்றில் தாய் அணில் குட்டி ஈன்று விட்டு சென்று விடும் அல்லது மரத்தில் இருந்து சில குட்டிகள் தவறுதலாக கீழே விழக்கூடும். அதுதவிர, அணில்களின் எதிரி விலங்குகளான காக்கை, பூனை போன்றவை அணில் குட்டிகளை தூக்கிச் செல்லும்போது, அவற்றிடம் இருந்து நீங்கள் காப்பாற்றி இருக்கக்கூடும். எதுவாக இருந்தாலும், இதுபோன்று கைவிடப்பட்ட குட்டிகளை எவ்வாறு பராமரிப்பது என்று தெரிந்துகொள்வோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை காப்பாற்றி வீட்டிற்கு கொண்டு வந்தீர்கள் என்றால், எந்த காரணத்தைக்கொண்டும் அவற்றை பிரிக்காதீர்கள். அவை ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும்.
அணில் குட்டிகளை வெதுவெதுப்பான வெப்பநிலையில் வைப்பது முக்கியம். குட்டிகளை நீங்கள் காப்பாற்றி கொண்டு வந்தவுடன், சிறிது நேரம் உங்கள் உள்ளங்கையில் அவற்றை வைத்திருக்கலாம். பின்னர் பருத்தி துணிகளைப் போட்டு அந்தக் குட்டிகளை மென்மையாகப் பொதிந்து வைப்பது நல்லது. இதனால் அவற்றுக்கு தேவையான இயற்கையான வெப்பம் கிடைக்கும்.
சம அளவு தண்ணீர் கலக்கப்பட்ட பாலில், ஒரு சிட்டிகை குளுக்கோஸ் பவுடர் மற்றும் ஒரு துளி தயிர் கலந்து அவற்றுக்கு 'சிரிஞ்ச்' மூலம் ஊட்டலாம். மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை இவ்வாறு கொடுப்பது நல்லது. அணில் குட்டிகள் அவ்வப்போது சிறுநீர், மலம் கழிப்பதை கண்காணிப்பது முக்கியம். அவற்றை தேவையான இடைவெளியில் சுத்தம் செய்து விடுங்கள்.
வளர்ந்த அணில்களுக்கு தேங்காய் துண்டுகள், உடைத்த கடலை, காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை உணவாகக் கொடுக்கலாம்.
ஓரளவு வளர்ந்த நிலையில் அல்லது காயங்கள் குணமான நிலையில், அணில்களை இயற்கையான சூழலில் அவற்றின் விருப்பம்போல விட்டு விடுவதே சிறந்தது.
அணில் குட்டிகளுக்கு அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டு இருந்தால் அவற்றுக்கு போதுமான முதலுதவி செய்ய வேண்டும். பின்னர் உடனடியாக அவற்றை கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு செல்வதே நல்லது.
மரத்தில் இருக்கும் கூட்டில் இருந்து கீழே விழும் அணில் குட்டிகளுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றால், அவற்றை அதன் தாயுடன் சேர்ப்பதே சிறந்த வழியாகும். தாய் அணில் நிச்சயமாக தன்னுடைய குட்டிகளைத் தேடி திரும்ப வரும். எனவே குட்டிகளை எந்த இடத்தில் இருந்து கண்டெடுத்தீர்களோ, அங்கேயே மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும். நான்கு மணி நேரத்துக்கும் மேலாக தாய் அணில் வரவில்லை என்றால், குட்டிகளுக்கு தேவையான பாதுகாப்பை நீங்கள் வழங்கலாம்.