வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 'டூல்ஸ்'

இரும்பு அல்லது மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட சிறிய அளவிலான சுத்தியல் வீட்டில் இருக்க வேண்டும். ஆணி அடிப்பது முதல் வீட்டில் உள்ள மரச்சாமான்களை பொருத்துவதற்கும், சீரமைப்பதற்கும், சில சமயங்களில் கெட்டியான உணவுப் பொருட்களை உடைக்கவும் பயன்படும்.

Update: 2022-12-18 01:30 GMT

வீட்டைப் பராமரிப்பதற்கும், சிறு சிறு பழுதுகளை சீர்படுத்துவதற்கும் ஒரு சில கருவிகளை கைவசம் வைத்திருப்பது நல்லது. இவ்வாறு வாங்கும் கருவிகள் தரமாக இருப்பது முக்கியம். அந்த வகையில் எந்தெந்தக் கருவிகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

ஸ்குரூ டிரைவர் செட்:

சிறியது முதல் பெரிய அளவிலான ஸ்குரூ டிரைவர் செட், டூல்ஸ் பெட்டியில் கட்டாயம் இடம் பெற வேண்டும். பட்டை, நட்சத்திரம் என இருவகையான ஸ்குரூ டிரைவரையும் ஒரே கைப்பிடியில் பொருத்திக்கொள்ளும் வகையிலான 'மல்டிபிள் செட்' வைத்திருப்பது உதவியாக இருக்கும்.

அளவுகோல்:

சுவரோடு பொருத்தப்பட்ட சாதனங்களை இடம் மாற்றுவது அல்லது ஒரு அறையை முழுவதுமாக மாற்றி அமைக்க நினைக்கும்போது, பொருட்கள் அல்லது இடத்தை அளப்பதற்கு அளவுகோல் அவசியம். ஸ்கேல், இன்ச் டேப் அல்லது ஸ்டிக் மெஷர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருப்பது நல்லது.

சுத்தியல்:

இரும்பு அல்லது மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட சிறிய அளவிலான சுத்தியல் வீட்டில் இருக்க வேண்டும். ஆணி அடிப்பது முதல் வீட்டில் உள்ள மரச் சாமான்களை பொருத்துவதற்கும், சீரமைப்பதற்கும், சில சமயங்களில் கெட்டியான உணவுப் பொருட்களை உடைக்கவும் பயன்படும்.

பசை டேப்:

ஒரு புறம் மட்டும் ஒட்டுவது, உள் மற்றும் வெளிப்புறமும் ஒட்டும் படியான டேப்களை அவசியம் வைத்திருக்க வேண்டும். இவற்றுக்கான பயன்பாடு எல்லையற்றது. கிழிந்த ஆவணங்களை ஒட்டுவதற்கு, சிறிய அளவிலான ஓட்டைகளை அடைப்பதற்கு, மின்சார கேபிள்களை இணைப்பதற்கு, சுவற்றில் காகிதங்களை ஒட்டுவதற்கு டேப்கள் தேவை. இவற்றில் பல வகைகளும், வண்ணங்களும் உள்ளன. உங்களின் தேவைக்கேற்றதை பயன்படுத்தலாம்.

டார்ச் லைட்:

மின் தடை ஏற்படும் நேரங்கள், இருளான பகுதிகள், உயரம் அல்லது ஆழம் அதிகமாக இருக்கும் தொட்டிகளை ஆய்வு செய்வதற்கு டார்ச் லைட் தேவை. கைக்குள் அடங்கும் அளவிலான டார்ச் லைட் பயன்படுத்துவது சவுகரியமாக இருக்கும்.

இடுக்கிகள்:

குறடு, கட்டிங் பிளேடு, ஸ்குரூ டைட்டர், கம்பி மடக்கி ஆகியவை இருக்கும் இடுக்கிகளை டூல்ஸ் பாக்ஸில் அவசியம் வைத்திருக்க வேண்டும். இவை கம்பிகளை வளைக் கவும், மடக்கவும், ஸ்குரூவை கழற்றவும், மாட்டவும், இறுக் கவும், மின் ஒயர்களை வெட்டவும் பயன்படும்.

அட்ஜஸ்டபுள் ஸ்பேனர்கள்:

மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், மிக்சி, கிரைண்டர், பர்னிச்சர் போன்ற பொருட்களை பழுது பார்க்கவும், திறந்து மூடவும் இவ்வகை ஸ்பேனர்கள் பயன்படும். சைக்கிள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை சீர்படுத்தவும் அட்ஜஸ்டபுள் ஸ்பேனர்கள் தேவைப்படும். இவை எளிதில் ஒரு பொருளின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் கழற்றி எடுக்கவும் உதவும்.

இவை தவிர அட்ஜஸ்டபுள் கத்தியும், மல்டி டூல் எனப்படும் ஒரே பொருளில் கத்தி, ஸ்குரூ டிரைவர், இடுக்கி, அளவுகோல், கத்தரி போன்றவை இருக்கும் உபகரணத்தையும் டூல்ஸ் பாக்ஸில் வைத்திருப்பது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்