இப்படிக்கு தேவதை
நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை, மரியாதைக்குரிய முறையில் அவரிடம் தெரிவியுங்கள். அவரது கல்வித் தகுதியின் அடிப்படையில் அவருடைய அறிவுத்திறன் அல்லது குணங்களை மதிப்பிடாதீர்கள்.;
1. பட்டதாரியான என்னை, தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். திருமணம் நடந்த சில மாதங்கள் வரை எங்களுக்குள் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. பின்னர் கணவர், குடும்பம் மற்றும் தொழிலில் ஏதாவது தவறாக செய்யும்போது, அதனை நாசூக்காக சுட்டிக்காட்டி திருத்த முற்பட்டேன். ஆனால் அவர் அதை புரிந்துகொள்ளாமல், 'படித்த திமிர்' என்று என்னுடன் சண்டை போட ஆரம்பித்தார். அவரது தவறுகளால் பொருளாதார ரீதியாக பல்வேறு இழப்புகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு எனக்கு ஆலோசனை கூறுங்கள்.
உங்கள் இருவரின் கல்விப் பின்னணியில் உள்ள வேறுபாட்டால், வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையும், கணவரின் கண்ணோட்டமும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அவரது கோபம், அவருடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகும். ஒரு தவறை செய்து அதன்மூலம் கற்றுக்கொள்வது அவருடைய அணுகுமுறையாக இருக்கலாம். தவறு நிகழாமல் தவிர்ப்பது உங்களுடையதாக இருக்கலாம். வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொள்வதில், ஒவ்வொருவருக்கும் ஒரு அணுகுமுறை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
அவரது முடிவுகளுக்கு மரியாதை கொடுங்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை, மரியாதைக்குரிய முறையில் அவரிடம் தெரிவியுங்கள். அவரது கல்வித் தகுதியின் அடிப்படையில் அவருடைய அறிவுத்திறன் அல்லது குணங்களை மதிப்பிடாதீர்கள். அவர் வாழ்க்கையைப் பார்க்கப் பழகிய வழியில் செல்வது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், அவருடைய நல்ல குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உறவின் உறுதியை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு திருத்தங்களை செய்யலாம்.
2. எனக்கு வயது 19. என் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள். ஆடைகள் அணிவது முதல் நண்பர்களுடன் பழகுவது வரை எல்லாவற்றிலும் மிகவும் கண்டிப்போடு இருப்பார்கள். இந்த நிலையில் நான் கடந்த 4 ஆண்டுகளாக வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்தேன். இதை அறிந்த எனது பெற்றோர் எதிர்த்தார்கள். அதனால் காதலை மறக்க சம்மதித்தேன். ஆனால் காதலரை மறக்க முடியாமல், மீண்டும் அவருடன் காதலைத் தொடர்ந்து வருகிறேன். என்னால் பெற்றோரையும் பிரிய முடியாது. காதலரையும் இழக்க முடியாது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் உங்களுடைய 15 வயதில் இருந்து காதலித்து வருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். இது காதலாக இல்லாமல், வயதின் காரணமாக ஒருவர் மீது வரும் ஈர்ப்பாகவும் இருக்கலாம். உங்கள் காதலரின் வயது, அவரது வேலை குறித்து நீங்கள் குறிப்பிடவில்லை. மத வேறுபாடுகள், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில், இந்த உறவு நீண்ட காலம் செயல்படுமா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் பொருளாதார ரீதியில் தனித்து இயங்கவில்லை. அவருடைய குடும்பப் பின்னணியை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வயதில் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் தெளிவாக செயல்பட முடியாது. முதலில் உங்கள் பொருளாதார சுதந்திரத்தில் கவனம் செலுத்தி, உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள். அதன் பிறகு நீங்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்லுங்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீர்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.