இப்படிக்கு தேவதை
உங்கள் மகன்கள் உங்களிடம் பணத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்றால், உங்கள் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையங்களில் சேருங்கள். அங்கு உங்களைப் போல இருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
1. எனக்கு 65 வயது ஆகிறது. என் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். நாங்கள் இருவரும் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். எங்களுக்கு 5 மகன்கள் இருக்கின்றனர். ஆனால், யாரும் இப்போது எனக்கு ஆதரவாக இல்லை. தனியாக வாழ்கிறேன். பணத்தேவை வரும்போது மட்டும் அவ்வப்போது அவர்கள் என்னிடம் வந்து பணம் பெற்று செல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு என் அனுமதி இல்லாமல், என்னுடைய நகைகளை எடுத்துச் சென்றனர். அவர்களை தடுக்கவும் முடியவில்லை. கடைசி காலத்தில் நிற்கதியாக நின்று விடுவேனோ என்ற பயம் அதிகரிக்கிறது. எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.
இந்த நிலையில் நீங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், அவர்கள் அனைவரும் ஏன் உங்களிடம் இருந்து விலகி விட்டார்கள் என்பதை, நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆராய்ந்து பார்க்க வேண்டிய தருணம் இது. மகன்களுக்கும், உங்களுக்கும் இடைவெளி உருவாகும் அளவுக்கு உங்களுடைய செயல்கள் ஏதாவது அமைந்திருக்கிறதா? என்று யோசித்துப் பாருங்கள்.
அவர்கள் எல்லோருடனும் மனம்விட்டு பேசுங்கள். நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுக்கும் இயந்திரம் அல்ல என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுடைய அன்பும், ஆதரவும் கிடைப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று அவர்களிடம் கேளுங்கள். அதற்காக நீங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றால், மகிழ்ச்சியுடன் அதை செய்யுங்கள். வாழ்க்கை மிகவும் குறுகியது. அதை மகிழ்ச்சியாக வாழும் தகுதி எல்லோருக்கும் இருக்கிறது.
உங்கள் மகன்கள் உங்களிடம் பணத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்றால், உங்கள் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையங்களில் சேருங்கள். அங்கு உங்களைப் போல இருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். சில நேரங்களில் நண்பர்களும் குடும்பமாக மாறுவார்கள். உங்கள் மகிழ்ச்சியை வேறு வழியில் தேடுங்கள்.
2. எனது அண்ணன் சொந்தமாக தொழில் செய்கிறேன் என்று, சேமிப்பில் இருந்த பணம் அனைத்தையும் இழந்து விட்டார். இதனால் அண்ணி கோபித்துக்கொண்டு அவர்களின் பெண் குழந்தைகள் இருவரோடும் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். 5 வருடங்களுக்கு மேலாகியும் இருவரும் சமாதானம் ஆகவில்லை. இப்போது அண்ணன் தனது தவறை உணர்ந்து தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். ஆனாலும் அண்ணி அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. இவர்களை ஒன்று சேர்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறுங்கள்.
உங்கள் சகோதரர் பணியாற்ற ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் குறைவாக இருந்தால், அவரது மனைவி இந்த விஷயத்தில் கணவரது நிலைத்தன்மையை நம்புவது கடினமாக இருக்கும். அதற்கு நேரம் எடுக்கும். அவர்களின் உறவில் நிதி ரீதியான நம்பிக்கை முற்றிலும் உடைந்து விட்டது. அதை மீண்டும் உருவாக்குவதற்கு நீண்ட காலம் ஆகும். அதுவரை உங்கள் சகோதரர், தான் மாறிவிட்டார் என்பதை மீண்டும் மீண்டும் தனது மனைவிக்கு நிரூபித்து கொண்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் சிக்கலை ஏற்படுத்தும் குடும்பத்தினரின் தலையீட்டைத் தவிர்க்கவும். குடும்ப நல ஆலோசகரின் உதவியை நாடுவது நல்லது. இது அவரது குடும்பம். அவரது வாழ்க்கை. அதனால் என்ன நடந்தாலும் அதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விஷயத்தை பொறுமையாகவே அணுக வேண்டும்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.