இப்படிக்கு தேவதை

மனநலத்தை பாதுகாக்கும் சிறந்த சிகிச்சை முறையாக செல்லப்பிராணிகள் வளர்ப்பு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் நிபந்தனையற்ற அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறார்கள்.

Update: 2023-04-09 01:30 GMT

1. நான் இயல்பிலேயே சற்று அழகானவள். எனது அழகை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று கூடுதலாக மேக்கப் செய்து கொள்வேன். நாளடைவில் மேக்கப் போடாமல் அருகில் இருக்கும் கடைக்குச் செல்வதற்குக்கூட தயங்கினேன். இப்போது வீட்டில் இருக்கும் தருணங்களிலும், மேக்கப்போடு தான் இருக்கிறேன். எனது குடும்பத்தினருக்கு இது பிடிக்கவில்லை. மேக்கப் போடாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் என்னால் முடியவில்லை. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.

உங்கள் அழகால் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்த நீங்கள், அதை தொடர்ந்து தக்கவைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளின் விளைவே இது. அழகைத் தவிர்த்து சமையல், கல்வி, சமூகத் திறன்கள் என எதிலாவது நீங்கள் சிறந்து விளங்கக்கூடும். அத்தகைய திறமையால் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்யுங்கள். அழகை, உங்கள் அடையாளமாக வைத்துக்கொள்ளாதீர்கள். வயது காரணமாக உங்கள் அழகு மறைந்துவிட்டால், உங்கள் அடையாளம் தொலைந்து விட்டதாகவும், சுய உணர்வு சிதைந்து விட்டதாகவும், நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். அது உங்கள் மனதை வெகுவாக பாதிக்கும். தேவை இருந்தால் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

2. எனது மகன் விரும்பி கேட்டுக்கொண்டதால், என் கணவர் அவனுக்கு ஒரு நாய்க்குட்டியை வாங்கி கொடுத்தார். ஆரம்பத்தில் நான் கண்டித்ததால், வீட்டுக்கு வெளிப்புறத்திலேயே நாய்க்குட்டியை கட்டி வைத்து வளர்த்து வந்தான். நாளடைவில் நாய்க்குட்டியை வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்து விளையாட ஆரம்பித்தான். இப்போது அது அவனுடனேயே தூங்க ஆரம்பித்துவிட்டது. நாயின் முடி வீடெங்கும் பரவிக் கிடப்பதை பார்த்ததும், எங்கள் ஆரோக்கியத்துக்கு ஏதாவது தீங்கு வருமோ? என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. இரவில் பாதி தூக்கத்தில் எழுந்து, நாய் முடி எங்காவது இருக்கிறதா? என்று டார்ச் அடித்து பார்க்கிறேன். இதுவே எனக்கு மனநோயாக மாறி விடுமோ? என்று அஞ்சுகிறேன்.

மனநலத்தை பாதுகாக்கும் சிறந்த சிகிச்சை முறையாக செல்லப்பிராணிகள் வளர்ப்பு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் நிபந்தனையற்ற அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறார்கள். அதேசமயம், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றை நல்ல முறையில் பராமரிப்பதும் முக்கியம். இது அவற்றின் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லாமல், வளர்ப்பவரின் நலனுக்கும் அவசியமானது.

செல்லப்பிராணியை வெளியில் வைத்திருக்கும்படி உங்கள் மகனிடம் கூறுவதற்கு பதிலாக, அவனுக்கு அதை சுத்தமாக பராமரிப்பதற்கு கற்றுக் கொடுங்கள். அதை முறையாகப் பராமரித்தால் வீட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று கூறுங்கள். ஆரம்பத்தில் உங்கள் மகனின் உதவியோடு நீங்கள் அதை செய்யுங்கள். நாளடைவில் உங்கள் மகனே பராமரிக்க ஆரம்பிப்பார். ஒருவேளை செல்லப்பிராணியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், அதை அவர் வளர்க்க முடியாது என்று உறுதியாக சொல்லுங்கள். குழந்தைகள் அனைத்தையும் கற்றுக்கொள்ள, பெற்றோராகிய நாம் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர். 

Tags:    

மேலும் செய்திகள்