இப்படிக்கு தேவதை

தாயை விட, புதிதாக பிறந்திருக்கும் குழந்தையின் மீதே குடும்பத்தினரின் கவனம் செல்வது இயல்புதான். இருந்தாலும் தாயின் மீது அதிக அக்கறை செலுத்துவதும், அவருக்கு ஆதரவாக இருப்பதும் முக்கியம்.;

Update: 2023-03-26 01:30 GMT

1. னது மருமகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. முதல் மூன்று நாட்கள் இயல்பாக இருந்த அவள், போகப்போக குழந்தை மீது எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல் இருக்கிறாள். எங்கள் அனைவரிடமும் எரிந்து விழுகிறாள். தாய்ப்பால் கொடுப்பதற்குக்கூட அவளை கட்டாயப்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. மகன் வெளியூரில் வேலை செய்வதால், குழந்தை பிறந்த அடுத்த நாளே மீண்டும் அங்கு சென்றுவிட்டான். தற்போது நான் தான் அவளை கவனித்து வருகிறேன். இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று கூறுங்கள்?

இது பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் மனஅழுத்தமாக இருக்கலாம். பல பெண்கள் இத்தகைய பிரச்சினையை சந்திக்கின்றனர். குழந்தை பிறந்த பின்பு தாயின் முழு நேரமும் குழந்தையை கவனிப்பதிலேயே செலவழியும். தனக்கான வேலைகளை செய்வதற்குக்கூட நேரம் இல்லாத நிலை ஏற்படும். எப்போதும் அழுதபடியே இருக்கும் குழந்தையை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். தூக்கமின்மை, தனிமை உணர்வு போன்றவை அவருக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கலாம்.

தாயை விட, புதிதாக பிறந்திருக்கும் குழந்தையின் மீதே குடும்பத்தினரின் கவனம் செல்வது இயல்புதான். இருந்தாலும் தாயின் மீது அதிக அக்கறை செலுத்துவதும், அவருக்கு ஆதரவாக இருப்பதும் முக்கியம். அவரது உணர்வுகளை புரிந்துகொள்வதற்கு கணவரும், குடும்பத்தினரும் முயற்சி செய்ய வேண்டும். அவர் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். குழந்தையை சிறிது நேரம் கவனித்துக்கொள்வதன் மூலம் அவர் தூங்குவதற்கான நேரத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம். தனிமையில், இயற்கையான சூழலில் அவர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செல்வதற்கு உதவலாம்.

உங்கள் மருமகளுக்கு மனநல மருத்துவரிடம் ஆலோசித்து, தேவையான சிகிச்சைகள் அளித்தால் எளிதாக குணப்படுத்த முடியும்.

2. நான் ஐ.டி துறையில் பணிபுரிகிறேன். மாமியார், மாமனாரோடு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். கணவருக்கு சரியான வேலை அமையவில்லை. எனது வருமானத்தைக் கொண்டு குடும்ப செலவுகளை சமாளித்து வருகிறேன். இந்த நிலையில் கணவரின் இரண்டு தங்கைகளும், அவர்களது கணவர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதால் பல மாதமாக எங்களுடன் வந்து தங்கியுள்ளார்கள். இருவரும் வீட்டு வேலையிலும், பொருளாதார ரீதியிலும் எந்த உதவியும் செய்வது இல்லை. கணவரோ, மாமியார்-மாமனாரோ, எனக்கு ஆதரவாக எதுவும் சொல்வதில்லை. அவர்களை தட்டிக் கேட்பதும் இல்லை. என் நிலையை இவர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது?

முதலில் உங்கள் கணவரிடம் நம்பிக்கையுடன் பேசி நீங்கள் அனுபவிக்கும் சிரமங்களை அவருக்கு தெரியப்படுத்துங்கள். அவர் நிலைமையை எவ்வாறு கையாளுகிறார் என்பதைப் பார்க்க சிறிது காலம் காத்திருங்கள். அவர் அதைச் சரியாக கையாளவில்லை என்றால், உங்கள் குடும்பத்தின் சூழலை கணவரது தங்கைகளுக்கு தெரிவியுங்கள். முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள், ஆனால் உறுதியாக இருங்கள்.

உங்கள் மாமனார்-மாமியார் மற்றும் கணவரின் தங்கைகள், இதை நேர்மறையாக எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். இருந்தாலும் சில சமயங்களில், சிலருக்கு புரிய வைக்கும் அளவுக்கு வலுவாகச் சொல்ல வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகத்தை சமாளிப்பதற்கு உங்களுக்கு கடினமாக இருப்பதை, அவர்களுக்குத் தெரியப்படுத்தாமல் தவிர்க்காதீர்கள். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதும் முக்கியம். எனவே இதில் நீங்கள் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் கொள்ள வேண்டாம்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர். 

Tags:    

மேலும் செய்திகள்