இப்படிக்கு தேவதை

பிள்ளைகளின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது, அவர்களின் பயணத்தில் முழு மனதுடன் ஆதரவளிப்பது என்பது பெற்றோர் குழந்தைக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு.

Update: 2023-03-12 01:30 GMT

1. ன் கணவரும், நானும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகிறோம். வீட்டு வேலைகள் உட்பட எல்லாவற்றிலும் அவர், எனக்கு உதவியாக இருப்பார். சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மட்டும் பதவி உயர்வு கிடைத்தது. இதுகுறித்து கணவரிடம் தெரிவித்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், சமீபகாலமாக அவரது செயல்பாடுகளில் மாற்றம் தெரிகிறது. என்னிடம் சரியாக பேசுவது இல்லை. பணியிடத்திலும் யோசனையில் மூழ்கியவாறே காணப்படுகிறார். 'என் பதவி உயர்வு தான், அவருக்குள் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கிவிட்டதோ?' என்று நினைக்கிறேன். இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டதில் இருந்து உங்கள் கணவர், உங்களின் வளர்ச்சிக்கு ஆதரவாகவும், ஊக்கமளிப்பவராகவும் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. பணியிடத்தில் அவரது உழைப்பு பாராட்டப்படாமல் இருப்பது அல்லது அவரது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காதது போன்ற காரணங்கள் அவருக்குள் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். வீட்டில் அவர் உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பணிகள், அவருக்கு ஏதேனும் அழுத்தத்தைக் கொடுக்கிறதா? என்பதையும் ஆராய்ந்து பாருங்கள்.

அவருடன் வெளிப்படையாகப் பேசுங்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து மகிழ்ந்திருந்த பழைய தருணங்களை, இப்போது எந்த அளவுக்கு இழந்திருக்கிறீர்கள் என்று அவரிடம் தெரிவியுங்கள். அவர் மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேளுங்கள். 'நீங்கள் அவருக்காக இருக்கிறீர்கள்' என்று, உங்கள் ஆதரவை உறுதிப்படுத்துங்கள். இதனால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்.

2. எனக்கு திருமணம் நடந்து 2 வருடங்களுக்குள் கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார். பல சிரமங்களுக்கு இடையில் எனது ஒரே மகனை வளர்த்து நன்றாகப் படிக்க வைத்தேன். இப்போது அவன் மும்பையில் பணியாற்றுகிறான். சென்ற மாதம் சொந்த ஊருக்கு வந்தவன், தன்னுடன் பணிபுரியும் வடமாநில பெண்ணை காதலிப்பதாக கூறினான். அந்த பென்னை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறான். அவனது திருமணத்தைப் பற்றி நான் கண்ட கனவுகள் கலைந்துபோனதன் ஏமாற்றத்தை என்னால் தாங்க முடியவில்லை. யாருமே வேண்டாம் என்று எங்காவது போய்விடலாமா என்று தோன்றுகிறது.

உங்கள் கணவரின் மறைவுக்குப் பிறகு, நீங்கள் வாழ்வதன் ஒரே நோக்கம் உங்கள் மகன் தான் என்று புரிகிறது. அதே சமயம் உங்களின் ஆசைகள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை அவர் மீது திணிப்பது நல்லதல்ல. தனக்கென்று விருப்பு-வெறுப்புகள் கொண்ட தனிநபராக அவரைப் பாருங்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் நீங்கள் அவரை நன்றாக வளர்த்தது உங்கள் சாதனை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணை அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவது, அவரை வளர்த்ததற்கு கைமாறு எதிர்பார்ப்பதை போன்றது ஆகும்.

பிள்ளைகளின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது, அவர்களின் பயணத்தில் முழு மனதுடன் ஆதரவளிப்பது என்பது பெற்றோர் குழந்தைக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு. அவரது திருமணத்தைப் பற்றிய உங்கள் கனவுகள் நிறைவேறாமல் போகலாம். ஆனால் அவர் விரும்பும் ஒருவருடன் அவரது திருமணம் நடந்தால், அவரின் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கும். உங்கள் மகனின் மகிழ்ச்சியைப் பற்றி சிந்தியுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

Tags:    

மேலும் செய்திகள்