இப்படிக்கு தேவதை

வாழ்க்கையில் மாற்றம் மட்டுமே நிரந்தரம். அதை மனதார ஏற்றுக்கொண்டு முன்னேறுங்கள். வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகானது. அதில் எந்த இடத்திலும் தேங்கி நிற்காதீர்கள்.

Update: 2023-02-12 01:30 GMT

1. னக்கு வயது 30. என் பெற்றோரை விட்டு ஒரு நாள் கூட பிரிந்தது இல்லை. அவர்களைப் பிரிய நேரிடும் என்பதால், திருமணத்தைப் பற்றி இதுவரை யோசிக்கவில்லை. சமீபகாலமாக வயது முதிர்வால் பெற்றோர் சிரமப்படுகின்றனர். அவர்களது நண்பர்கள் சிலரின் இறப்பு, என்னை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது. பெற்றோருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பயப்படுகிறேன். இதனால் நான் இரவில் சரியாக தூங்குவது இல்லை. இப்படியே தொடர்ந்தால் மனநோயாளி ஆகிவிடுவேனோ என்று கவலைப்படுகிறேன். எனக்கு நல்வழி கூறுங்கள்.

வயது முதிர்வின் காரணமாக பெற்றோரில் ஒருவரை இழக்க நேர்ந்தாலும், உங்கள் மனநிலை மோசமாகும் சூழல் உள்ளது. பெற்றோரிடம் இருந்து உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான எல்லைகளை நிர்ணயித்துக் கொள்வது வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். இது யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற உதவும். ஆனால், உங்கள் விஷயத்தில் அது நடக்கவில்லை என்பதை உணர முடிகிறது.

மரணத்தை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை. இழப்பு வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அது ஒரு நாள் நடக்கும். அப்போது நாம் அனை வரும் அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் குடும்பம் மற்றும் நண்பர்களின் வடிவத்தில் உங்களுக்கு ஆறுதலும், ஆதரவும் தருபவர்களை நீங்கள் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். வாழ்க்கையில் மாற்றம் மட்டுமே நிரந்தரம். அதை மனதார ஏற்றுக்கொண்டு முன்னேறுங்கள். வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகானது. அதில் எந்த இடத்திலும் தேங்கி நிற்காதீர்கள்.

2. எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. கல்லூரி படிக்கும்போது தோழி ஒருத்தி, என்னுடைய பிறந்த நட்சத்திரத்தின் படி எனக்கு திருமணம் நடந்தால் சில வருடங்களிலேயே கணவர் இறந்து விடுவார் அல்லது பிரிந்து விடுவார் என்று கூறினாள். அப்போது நான் அதை நம்பவில்லை. ஆனால் நான் காதலித்து திருமணம் செய்த கணவர், அடுத்த வருடமே என்னை விட்டு பிரிந்தார். இப்போது குடும்ப நண்பர் ஒருவர், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி சம்மதம் கேட்கிறார். எனக்கும், குடும்பத்தினருக்கும் அவரை பிடித்திருக்கிறது. ஆனால், என் தோழி கூறிய வார்த்தைகள் இன்னும் மனதை விட்டு நீங்காமல் ஒலிக்கிறது. இந்த திருமணமும் அவ்வாறு ஆகிவிடுமோ என்று பயப்படுகிறேன். உங்களுடைய ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்.

உங்கள் தோழி கணித்ததும் உங்களுடைய திருமண வாழ்க்கையில் நடந்ததும் தற்செயலாக பொருந்திப் போனதாக நினைக்கிறேன். ஏனெனில் உங்கள் தோழி ஜோதிட சாஸ்திரத்தில் பயிற்சி பெற்றவர் கிடையாது. பொதுவான குறிப்பில் அவ்வாறு கூறியிருக்கிறார். ஜோதிடம் ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட நுணுக்கங்களைக் கொண்டது. பயிற்சி பெறாத ஒருவரால் அதை சரியாகக் கணிக்க முடியாது. உங்கள் முந்தைய திருமண வாழ்க்கையில் என்ன தவறு நடந்தது என்பதை யோசித்துப் பாருங்கள். அதில் இருந்து இப்போது நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியவை என்ன என்று அறிந்துகொள்ளுங்கள்.

போதுமான இடைவெளி எடுத்துக்கொண்டு உங்களை திருமண வாழ்வுக்கு ஏற்றவராக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும், ஆதரவாகவும் வாழும் வாழ்க்கை, பல வருடங்களுக்கு முன்பு உங்கள் தோழி கணித்ததை விட முக்கியமானது. சரியான துணையைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

Tags:    

மேலும் செய்திகள்