இப்படிக்கு தேவதை

அவள் எந்தத் தவறும் செய்யாமல், பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் உணர்ச்சி கரமான நிலையில் இருந்திருப்பாள்.

Update: 2023-01-22 01:30 GMT

1. ன் மகனுக்கு 10 வயது. யாரிடமும் பழகாமல் கூச்ச சுபாவம் உள்ளவனாகவே இருக்கிறான். பள்ளியிலும் அவனுக்கு நண்பர்கள் குறைவு. அவனை இயல்பாக மாற்ற வேண்டும் என்று டியூஷன் மற்றும் இதர செயல்பாட்டு வகுப்புகளுக்கு அனுப்புகிறேன். ஆனாலும், அவனிடம் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. எங்களிடம் பேசுவதற்குக்கூட தயங்குகிறான். அவனை எப்படி மாற்றுவது என்று ஆலோசனை கூறுங்கள்.

உளவியலாளரிடம் உங்கள் மகனை நேரில் அழைத்துச் சென்று ஆலோசிப்பது நல்லது. அவர் சில பரிசோதனைகள் செய்து, உளவியல் தொடர்பான சிறப்பு சிகிச்சைகள் செய்ய வேண்டுமா? என்று மதிப்பிடுவார். பரிசோதனை மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க எதையும் காட்டவில்லை என்றால், மனநல நிபுணர்களிடம் சில சமூகத்திறன் பயிற்சிகள் மேற்கொள்ள பரிந்துரைப்பார். அதன் மூலம் உங்கள் மகனை இயல்பாக மாற்ற முடியும்.

2. எனது சகோதரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள். எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவாள். ஆண் நண்பர்களிடமும் ஆரோக்கியமான நட்புடன் பழகி வந்தாள். அவள் ஆண்களிடம் இயல்பாக பழகுவது, எங்கள் தந்தைக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் ஆண் நண்பர்களிடம் பேசினாள் என்று, தெருவில் அனைவர் எதிரிலும் அவளை அடித்து விட்டார். அடுத்த சில நாட்களில், அவளிடம் ஒருவன் காதலை தெரிவித்திருக்கிறான். அவளும் சம்மதம் தெரிவித்து பழகி வருகிறாள். அந்த வாலிபன் பல தீய பழக்கங்கள் உடையவன். எனவே அவனை விட்டு விலகுமாறு தங்கைக்கு அறிவுரை கூறினேன். அவள் அதை காதுகொடுத்து கேட்கவில்லை. 'அப்பாவை பழிவாங்கவே அவனை காதலிக்கிறேன்' என்கிறாள். அவளை இதில் இருந்து மீட்பதற்கு வழி சொல்லுங்கள்.

உங்கள் சகோதரி, தனது ஆண் நண்பர்களுடன் ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொண்டு பழகுவதை, தந்தை புரிந்துகொள்ளாதது துரதிருஷ்டவசமானது. அவள் எந்தத் தவறும் செய்யாமல், பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் உணர்ச்சி கரமான நிலையில் இருந்திருப்பாள். அந்த நேரத்தில் தனது மனக் காயங்களுக்கு மருந்திடக்கூடிய ஒரு நபர் அவளுக்கு தேவைப்பட்டிருக்கலாம். அது அந்த வாலிபனாக இருக்கக்கூடும் என்று அவள் நினைத்திருக்கலாம்.

உங்கள் தந்தையின் மீதான கோபம், அவமானம் போன்றவற்றை நீங்கள் சரி செய்ய முயற்சி செய்யுங்கள். அப்போது அவள் அவற்றை உணர்ச்சி ரீதியில் பார்க்காமல், பகுத்தறிவோடு அணுகத் தொடங்குவாள்.

தற்போது நீங்கள், அவளது உறவில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டாம். ஏனெனில் எவ்வளவு வேகமாக அவர்களை விலக்குவதற்கு முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு வேகத்தில் அவர்கள் உறவை வலுப்படுத்துவதற்கு முயற்சிப்பார்கள். எனவே அவளுக்கு அரவணைப்பு, புரிதல் மற்றும் ஆதரவை வழங்குங்கள். அது உணர்ச்சி ரீதியாக அவள் குணமடைய உதவும். அதனால், அவளுடைய உறவைப் பற்றி அவள் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க முடியும்.

அவள் ஒரு மனநல நிபுணரிடம் பேச விரும்பினால், அதற்கு ஏற்பாடு செய்யவும். அதன் மூலம் அவள் மேலும் தெளிவு பெறமுடியும். இந்தப் பிரச்சினையை உணர்ச்சி ரீதியாக இல்லாமல், புத்திசாலித்தனமாக அணுகவும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

Tags:    

மேலும் செய்திகள்