இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
நான் கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறேன். சிறுவயதில் இருந்தே எனது அத்தை மகனுடன் உயிருக்குயிராக பழகி வருகிறேன். இருவரது பெற்றோரும் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், எனது பெற்றோர் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளுமாறு என்னை வற்புறுத்தி வருகின்றனர். என்னால் அத்தை மகனைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.
மிகவும் உணர்ச்சிவசமான சூழ்நிலை இது. இந்த நேரத்தில், நீங்கள் யதார்த்தத்தை எதிர்கொள்வது மற்றும் வேறொரு நபரை திருமணம் செய்துகொள்வதற்கு உங்கள் மனதை மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் பெற்றோரின் தவிப்பை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு விளக்க முயற்சிக்கவும். தங்கள் மகளின் வாழ்க்கையை நிச்சயமற்ற நிலையில் பார்க்கும் அவர்கள் கடுமையான துயரத்தில் இருப்பார்கள். அதேசமயம், திடீரென்று ஒரு மாற்றத்தை ஏற்பதற்கு உங்களை அவர்கள் கட்டாயப்படுத்துவது நியாயமில்லை.
உணர்ச்சியின் அடிப்படையில் இல்லாமல், பகுத்தறிவோடு புத்திசாலித்தனமான முடிவை நீங்கள் எடுப்பீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். ஆனால், ஒரு புதிய வாழ்க்கைக்கு மனதை தயார்படுத்த உங்களுக்கு அதிக நேரம் தேவை.
நாம் துன்பப்படுவதைப் பார்க்க நம் அன்புக்குரியவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். மற்றொரு நபரை திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் நீங்கள் துன்பப்பட்டால், அது ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட உங்கள் காதலருக்கு வலுவான உணர்ச்சி வலியை ஏற்படுத்தலாம்.
நீங்கள் இருக்கும் வேதனையான சூழ்நிலையைத் தாங்கிக் கொள்ளுங்கள். அதில் இருந்து உடனடியாக வெளியே வரவேண்டும் என்று அவசரப்படாதீர்கள். முழுமையாக அதை உணர்ந்து வலிமையான
வராக மீண்டு வாருங்கள். அப்போதுதான் நீங்கள் புத்துணர்ச்சியுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவீர்கள். இது உங்கள் காதலருக்கும் கூட நிம்மதி தரும். உங்களுக்கு பிரிவின் வலியைக் கொடுத்ததற்காக அவர் குற்ற உணர்வில் இருப்பார். அதில் இருந்து அவர் மீள்வதற்கு உங்கள் புதிய மாற்றம் உதவும். அவர் மனம் அமைதியாக இருக்க வேண்டிய தருணம் இது. இந்த கடினமான காலங்களில் கடவுள் உங்களுடன் இருப்பார்.
எனக்கு வயது 40. மகன்கள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். கணவர் வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார். கடந்த சில மாதங்களாக காரண மில்லாமல் என் மனது சோர்வாக இருக்கிறது. எதிலும் ஈடுபாடு இல்லை. எந்த வேலை செய்வதற்கும் சலிப்பாக உள்ளது. இதனால் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மனநிலையை மாற்றுவது எப்படி?
மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை நோக்கி நீங்கள் சென்றுகொண்டு இருப்பதால், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உங்களுக்கு இத்தகைய மனநிலையை உண்டாக்கக்கூடும். தைராய்டு சுரப்பி செயல்பாடு சீரற்று இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மனதைப் புத்துணர்வோடு இருக்கச் செய்வதற்கு, புதிய செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வீட்டுக்குள்ளேயே இருக்காமல் காலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்யுங்கள். சோம்பலுக்கும், சலிப்புக் கும் இடம் கொடுக்காமல் உங்களுக்கு பிடித்ததை செய்து கொண்டே இருங்கள். உணவு முறையில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவழியுங்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.