இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
1. எனக்கு வயது 30. திருமணமான 8 வருடத்தில் இதுவரை 5 முறை கர்ப்பம் அடைந்தேன். ஒவ்வொரு முறையும் தானாகவே கரு கலைந்தது. மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டதால் தான் இவ்வாறு நடக்கிறது என்று எனது மாமியார் அடிக்கடி கூறுகிறார். அவர் சொல்லும் பல விஷயங்கள் திகிலாக இருக்கிறது. இதனால் என்னை அறியாமல் பயப்படுகிறேன். இரவில் அடிக்கடி தூக்கம் கலைகிறது. இதில் இருந்து மீள்வது எப்படி?
அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லாத தகவல்களால் நீங்கள் உணர்ச்சி ரீதியாக அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. உங்கள் கர்ப்பத்தைக் காப்பதில் உள்ள பிரச்சினை காரணமாக சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளீர்கள். அது முழுமையான பலன் அளிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்களும், உணர்ச்சி ரீதியான ஆதரவும் நிச்சயம் தேவை. உங்கள் மாமியார் மூலம் நீங்கள் பெறுகின்ற எதிர்மறையான தகவல்கள்,
உங்களை உணர்ச்சி ரீதியாக கட்டுப்பாடின்றி சிந்திக்க செய்து மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இது நீங்கள் கர்ப்பம் அடைவதைத் தடுக்கலாம். பெண்கள் கர்ப்பம் அடைவதைத் தடுக்கும் காரணிகளில் மனஅழுத்தம் முக்கியமானது. எனவே, இது குறித்து உங்கள் கணவருடன் விவாதியுங்கள். இதற்கு நடைமுறைக்கு ஏற்ற தீர்வு என்ன என்று யோசித்து முடிவெடுங்கள். நீங்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் உள்ள மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள். உங்கள் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்த தூக்கம் மிகவும் முக்கியம். ஆனால் நீங்கள் ஆழ்ந்து தூங்காத அளவுக்கு உங்கள் மனநிலை உள்ளது. ஆகையால் உடனே இதற்கு தீர்வு காண்பது நல்லது.
2. எனக்கு வயது 25. சூழ்நிலை காரணமாக, பிறந்தது முதல் நான் வாழ்ந்து வந்த தனி வீட்டை விற்றுவிட்டோம். கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிக்கிறோம். பல குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பில், மற்றவர்களுடன் பழகுவது கடினமாக இருக்கிறது. சுதந்திரம் இல்லாமல், ஏதோ ஒரு கட்டாயத்தில் வாழ்வது போல இருக்கிறது. எதிலும் ஈடுபாடு கொள்ள முடியவில்லை. இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
முற்றிலும் புதிய சூழ்நிலையில் நீங்கள் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைதான் இது. நமக்கு பழக்கமில்லாத வித்தியாசமான சூழ்நிலையில் இருக்கும்போது, அங்கிருக்கும் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கும், அதற்கு ஏற்றவாறு செயல்படுவதற்கும் மூளை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
எனவே உங்கள் புதிய சூழலில் இருக்கும் நேர்மறையான விஷயங்களை உற்று நோக்குங்கள். அவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அவர்களுடன் பழகுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபடுங்கள். இது உங்கள் உடலில் எண்டோர்பின் அளவை அதிகரிக்கும். அதன் மூலம் உங்களைச் சுற்றி இருக்கும் மகிழ்ச்சியான விஷயங்களைப் பார்ப்பீர்கள். இந்த சூழ்நிலையை உங்களுக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ளுங்கள். விரைவாகவே மகிழ்ச்சியை உணர ஆரம்பிப்பீர்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.