இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.;
1. எனக்கு வயது 50. பல வருடங்களுக்கு முன்பே கணவர் இறந்துவிட்டார். தையல் வேலை செய்து, ஒரே மகளை வளர்த்து ஆளாக்கினேன். ஆனால் அவள் எனக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டாள். வருத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டேன். ஒரு வருடம் முன்புவரை, வாரத்துக்கு ஒரு முறை என்னை வந்து பார்த்துச்சென்றவள், தற்போது தொலைபேசியில் பேசுவதுகூட அரிதாகிவிட்டது. எனக்கென யாருமில்லாத உணர்வு அதிகமாக தோன்றுகிறது. தையல் வேலை மட்டுமே துணையாக இருக்கிறது. மகளைப் பிரிந்த உணர்வு மனதை வாட்டுகிறது. எனக்கு ஒரு நல்வழி கூறுங்கள்.
தங்களைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக நேரத்தையும், ஆற்றலையும் செலவழிக்கும் பெண்களுக்கு, இந்த வயதில் தனிமை உணர்வு ஏற்படுவது இயல்பானதே. உங்களைப் போலவே உங்கள் மகள் தனது குடும்பத்தை கவனிப்பதில் அக்கறை செலுத்துவதால், அவருக்கு நேரமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 50 வயதில், நீங்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியிலான சிரமங்களை கடந்து கொண்டிருப்பீர்கள். இந்த சமயத்தில் உங்களை மனஅழுத்தத்தில் ஆழ்த்தும் உணர்ச்சிகள் ஏற்படுவது இயல்பானது.
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் நேரத்தையும், ஆற்றலையும் செலவிடுங்கள். உங்கள் மகள் அவரது திருமண வாழ்க்கையை நல்லவிதமாக கொண்டு செல்வதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். வாழ்க்கையில் இல்லாதவற்றை பற்றி நினைப்பதை விடுத்து, இருப்பதில் நிறைவைக் காண முயற்சி செய்யுங்கள். வாழ்வை புதியதாக உணர்வீர்கள்.
2. நான் குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகித்து வருகிறேன். ஆனால், வெளியே தனியாக செல்வது, பிறரிடம் பேசுவது, உறவினர்களோடு பழகுவது போன்றவற்றில் அதிக தயக்கம் இருக்கிறது. உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்குக்கூட போவதற்கு பிடிக்கவில்லை. இந்த மனநிலையில் இருந்து வெளிவர முடியவில்லை. எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.
இந்த நிலை, பெண்களுக்கான வீட்டு வேலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் சூழலில் நீங்கள் வளர்ந்ததால் இருக்கலாம். அல்லது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கலாம். சமூக நிகழ்வுகளுக்கு செல்லும்போது உங்களால் சிறப்பாக நடந்துகொள்ள முடியாது என மற்றவர்கள் கேலி செய்வார்களோ? என்று நீங்கள் தயங்கலாம்.
கணவன்-மனைவி ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, அவர்களுக்கு இடையிலான அன்பும், பாசமும் அதிகரிக்கும். இதைத் தவற விடாதீர்கள். உங்களை அதிகமாக வருத்திக்கொள்ளாமல், அவ்வப்போது சமூக நிகழ்ச்சிகளில் பங்கு பெறுங்கள். அங்கு நடப்பவற்றை அமைதியாக பாருங்கள். இது உங்களுக்கு நல்ல தொடக்கமாக அமையும். ஒரு கட்டத்தில் நீங்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் நிலையை அடைவீர்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.