இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.;
1. எனக்கு வயது 30. என்னுடைய குழந்தைகள் இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். கணவர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்கிறார். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவார். எனது அத்தை மகன் என்னை விட 10 வயது இளையவன். அவனது சிறு வயதில் இருந்தே என்னோடு இயல்பாகவும், அன்பாகவும் பழகி வருகிறான். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களோடு பேசிவிட்டு செல்வான். சமீபகாலமாக எங்கள் இருவரைப் பற்றியும் அருகில் இருக்கும் உறவினர்கள் தவறாகப் பேசுகின்றனர். என் கணவர், எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால், மற்றவர்கள் பேசுவதால், எங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமோ எனும் கவலை எனக்குள் அதிகரித்துவிட்டது. இந்த சூழலில் நான் எவ்வாறு நடந்துகொள்வது என்று ஆலோசனை கூறுங்கள்.
உறவினர்கள் உங்கள் இருவரின் பழக்கத்தைத் தவறாகப் பேசுவதன் காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள முற்படுங்கள். உங்கள் கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில், அத்தை மகன் உங்களைக் காண அடிக்கடி வருகிறாரா? அல்லது பிறர் தவறாக பேசும் அளவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்று யோசித்து பாருங்கள். உங்கள் பழக்கத்தைப் பற்றி உங்களுடைய கணவர் புரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியானது. என்றாலும், உங்கள் அத்தை மகனுடன் பழகுவதில் சரியான எல்லைகளை நீங்கள் வரையறுத்து இருக்கிறீர்களா? என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இல்லையெனில் உடனே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் இடையில் இருக்கும் புரிதலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
2. நான் காதல் திருமணம் செய்தவள். 8 மாத பெண் குழந்தை இருக்கிறது. எனது கணவர் என்னைவிட 18 வயது மூத்தவர். திருமணம் ஆன தொடக்கத்தில் இருந்தே, நாங்கள் இருவரும் எங்கு சென்றாலும் எங்களைப் பார்க்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தந்தை-மகள் என்று கேலி செய்வார்கள். அதனால் கணவருடன் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். இப்படியே எங்களுக்கு நடுவில் இடைவெளி அதிகமாகி விட்டது. எனது கணவர் என்னோடு இயல்பாகவே இருக்கிறார். ஆனால், என்னால் அந்த இடைவெளியை போக்க முடியவில்லை. இது எங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்குமோ என்று பயமாக இருக்கிறது. தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள்.
உங்கள் இருவரையும் பற்றி மற்றவர்கள் எத்தகைய கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். ஆனால், நீங்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களின் பேச்சுக்களை மனதில் கொண்டு, உங்கள் கணவருடன் வெளியே செல்வதைத் தவிர்த்து உணர்வுப்பூர்வமாக ஒரு இடைவெளியை உருவாக்கினால், நீங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைந்ததற்கான அர்த்தமே வீணாகிவிடும். உங்கள் திருமண வாழ்க்கையை மற்றவர்களின் விமர்சனங்கள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள். இந்த வாழ்க்கை உங்களுடையது. நீங்கள் தேர்ந்தெடுத்தது. அதை உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் வாழுங்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.