இப்படிக்கு தேவதை
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம்.;
1. கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய நண்பருக்கும், எனக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஐந்து வருடங்களில் எங்களிடையே ஒற்றுமையும், நல்ல புரிதலும் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் தற்போது நல்ல வேலையில் இருக்கிறோம். என்னுடைய பெற்றோர் சாதி, ஜாதகம், சுற்றார் என காரணங்களைச் சொல்லி எங்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள்.
இதன் காரணமாக, என் குடும்பத்தில் எல்லோரும் மன அமைதி இழந்து நிற்கிறோம். நான் என் பெற்றோர் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளேன். இந்த சூழ்நிலைக்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி என்னை வதைக்கிறது. எனக்கு வழிகாட்டுங்கள்.
வாழ்க்கையில் பல நேரங்களில், இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படும். அந்த இரண்டுமே சம அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து, நமது முடிவெடுக்கும் சூழலை கடினமானதாக்கும். இருந்தாலும் பகுத்தறிவு மற்றும் உணர்ச்சி இணைந்த புத்திசாலித்தனத்தை, நீங்கள் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.
உங்கள் பெற்றோரின் முடிவை ஏற்றுக்கொள்வதற்கும், உங்கள் இதயத்தைப் பின்பற்றுவதற்கும் இடையில் உள்ள நன்மை-தீமைகளை பகுப்பாய்வு செய்யுங்கள். இரண்டில் எது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது? எது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும், அதில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும். மற்றவர்களின் ஆதரவை எதிர்பார்த்து எந்த முடிவையும் எடுக்காதீர்கள். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும், உங்கள் முடிவின் விளைவுகளை எதிர்கொள்ளும் வலிமை உங்களுக்கு வேண்டும்.
2. எனது அண்ணன் 40 ஆண்டுகளாக வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவியும், இரண்டு மகன்களும் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். அண்ணன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து, இரண்டு மாதங்கள் தங்கிச் செல்வார். அப்போது அண்ணி மிகவும் நல்ல முறையில் நடந்துகொள்வார்.
ஒரு நாள் அண்ணி இரண்டு மகன்களையும் தாய் வீட்டில் விட்டுவிட்டு, மற்றொரு ஆணுடன் சென்று விட்டதாக தெரிவித்தார்கள். எனது அண்ணன் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், அண்ணி அந்த ஆணை விட்டு வர மறுத்துவிட்டார். அந்த ஆண் ஏற்கனவே திருமணம் ஆனவர். இப்போது எனது அண்ணனும், அவரது இரண்டு மகன்களும் தனியாக தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் எனது அண்ணன் என்ன முடிவு எடுக்க வேண்டும்?
உங்கள் அண்ணன் மற்றும் அவரது மனைவிக்கு இடையேயான மண வாழ்க்கை, எந்த வகையில் இருந்தது என்ற உண்மை நமக்குத் தெரியாது.
அவரது மனைவி செய்தது சரியா? தவறா? என்று யோசிப்பதற்கு பதில் உண்மை நிலையை புரிந்து நடந்துகொள்வதே நடைமுறைக்கு உதவும். சட்டப்பூர்வ திருமணத்தில் இருக்கும்போதே, அவர் தன் குழந்தைகளை கைவிட்டு, புதிய துணையுடன் வாழத் தொடங்கிவிட்டார். மீண்டும் உங்கள் அண்ணனுடன் சேர்ந்து வாழ அவர் விரும்பவில்லை. இந்தச் சூழ் நிலையை சட்டப்பூர்வமாகக் கையாள்வதே சரியான வழியாக இருக்கும். இதைக் கடந்து செல்வது குழந்தைகளுக்கு கடினமானதாக இருந்தாலும், உங்கள் அண்ணன் பக்குவப்பட்ட தந்தையாக நடந்து கொள்ளும்போது, அவர்களுக்கு அது சற்றே எளிதாக இருக்கும்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.