இப்படிக்கு தேவதை

குழந்தைப்பேறுக்கு தடையாக இருப்பது உங்களுடைய வயது இல்லை. குழந்தையை சரியான முறையில் வளர்க்க முடியுமா என உங்களுக்குள் இருக்கும் சந்தேகம்தான். நீங்கள் ஏற்கனவே பெற்றோராக வேண்டுமென எண்ணியிருந்தால், இப்போது குழந்தை இல்லாமல் இருக்கும் பட்சத்திலும் உங்களுக்குள் குழந்தை வளர்ப்பு குறித்த கேள்வி எழாமல் இருந்திருக்கும்.

Update: 2023-09-10 01:30 GMT

1. சிறு வயதில் இருந்தே எனது அத்தை மகனை உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். கல்லூரி படிக்கும்போது அவர் வேறொரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்ததும், எனது காதலை கைவிட்டேன். ஆனால் குடும்ப பெரியவர்கள் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை சமாதானப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி 2 வருடங்கள் ஆனபோதும் அவர் அந்தப் பெண்ணை மறக்க முடியாமலும், என்னுடன் வாழ முடியாமலும் தவித்து வருகிறார். நான் அவரை காதலித்த விஷயத்தை அவரிடம் இதுவரை சொல்லவில்லை. எனது கணவரின் மனநிலையை எவ்வாறு மாற்றுவது?

அவர் தனது முந்தைய உறவை முற்றிலும் மறக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. உங்கள் கணவர் அந்த பெண்ணுடன் நேரிலோ, சமூக ஊடகங்கள் அல்லது பொதுவான நண்பர் மூலமாகவோ இன்னும் தொடர்பில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த தொடர்பே அவரின் பழைய காதலை மறக்காமல் இருக்கக் காரணமாக இருக்கும். தவிர, அவரின் பழைய உறவின் பிரிவிற்கு நீங்களும் ஒரு காரணம் என்று அவர் எண்ணி இருக்கலாம். அவர்மீது நீங்கள் கொண்ட காதலை இப்போது வெளிப்படுத்துவது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்குமே தவிர, எந்த தீர்வும் தராது. பழைய உறவில் இருந்து அவர் மீண்டுவர எது தடுக்கிறது என்று அவருடன் மனம் திறந்து பேசுங்கள். மனைவியாக அல்லாமல் ஒரு நல்ல தோழியாக அவருக்கு உதவ நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவரை குணப்படுத்தும் செயல்பாட்டில் அவருக்கு உறுதுணையாக இருங்கள். அதே நேரத்தில் நீங்கள் விரும்பிய மனிதர் அவர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களிடம் உள்ள நற்குணத்தை நிச்சயம் காண்பார். வாழ்க்கையில் நல்ல திருப்பம் உண்டாகும்.

2. எனக்கு 38 வயது ஆகிறது. இதுவரை நானும், என் கணவரும் குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் நமக்காக யார் இருக்கிறார்கள்? என்ற பயம் எங்களை துரத்துகிறது. இப்போது நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம். அதேநேரம் இந்த வயதில் எங்களால் ஒரு குழந்தையை சரியான முறையில் வளர்க்க முடியுமா? அதற்கு எங்கள் உடலும், மனமும் ஒத்துழைக்குமா? என்ற சந்தேகமும் தோன்றுகிறது. இதுபற்றி தெளிவான முடிவு எடுக்க இயலாமல் வருந்துகிறோம். குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்களுக்கு வழிகாட்டவும்.

குழந்தைப்பேறுக்கு தடையாக இருப்பது உங்களுடைய வயது இல்லை. குழந்தையை சரியான முறையில் வளர்க்க முடியுமா என உங்களுக்குள் இருக்கும் சந்தேகம்தான். நீங்கள் ஏற்கனவே பெற்றோராக வேண்டுமென எண்ணியிருந்தால், இப்போது குழந்தை இல்லாமல் இருக்கும் பட்சத்திலும் உங்களுக்குள் குழந்தை வளர்ப்பு குறித்த கேள்வி எழாமல் இருந்திருக்கும். மேலும், திருமணமாகி இத்தனை வருடங்களில் குழந்தைப்பேறு பற்றி ஏன் நினைக்கவில்லை என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருவது பெற்றோரின் கடமை. இத்தனை வருடங்களாக நீங்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான அனைத்து காரணங்களையும் ஆராய்ந்து, அதன் பிறகு முடிவு செய்யுங்கள். உங்கள் முடிவு உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் உங்கள் குழந்தையின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். தாய்மை ஒரு சுகமான அனுபவம்.


வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

Tags:    

மேலும் செய்திகள்