இப்படிக்கு தேவதை

தனது கணவர் கொண்டுள்ள தவறான உறவின் காரணமாக, உங்கள் மகள் உணர்ச்சி ரீதியாக அதிர்ச்சி அடைந்து இருப்பார். அதனால்தான் விவாகரத்துக்கான உங்கள் முடிவை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது திருமணத்தைப் பற்றிய எந்த ஒரு முடிவும் அவளது விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும்.

Update: 2023-08-27 01:30 GMT

1. னக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைப்பேறு இல்லை. தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். கணவரின் பணி மாற்றம் காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டேன். தற்போது கணவருடன் புதிய ஊர் மற்றும் புதிய சூழலில் வசித்து வருகிறேன். கணவர் வேலைக்குச் சென்ற பின்பு வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். இதனால் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, ஏதாவது ஒரு வேலைக்குச் செல்கிறேன் என்ற என் விருப்பத்திற்கு கணவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரது மனதை எப்படி மாற்றுவது?

நீங்கள் பணியில் சேர்ந்தால் அதில் முழுமையாக ஈடுபட்டு, கருத்தரிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த மாட்டீர்கள் என்று உங்கள் கணவர் நினைக்கலாம். குழந்தைகளைக் கையாள்வதில் உங்கள் திறமை மேம்படும் வகையில், குழந்தைகளுடன் நீங்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் படியான ஒரு விளையாட்டுப் பள்ளியில் வேலைக்கு சேர்வது தற்போது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். உங்கள் கணவரும் இதை ஏற்றுக்கொள்ளக்கூடும். இருந்தாலும் முக்கியமாக கருத்தரிப்பதற்கான முயற்சிகளில் உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலுத்துங்கள். அதற்கு தேவையான மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளை பெறுங்கள். உணவு, உடல் எடை, தூக்கம் ஆகியவற்றை சீராக்குங்கள். உங்களது முயற்சிகள் அனைத்தையும் உங்களுடைய கணவர் பார்த்தவுடன், வேலை உங்கள் முன்னுரிமை அல்ல என்பதை புரிந்துகொள்வார். அதன் மூலம் உங்கள் வேலையைப் பற்றிய அணுகுமுறையை அவர் மாற்றிக்கொள்ளக்கூடும்.

2. என்னுடைய மகள் எங்களுடைய எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்தாள். அவளுக்கு முதல் குழந்தை பிறந்ததும் நாங்கள் சமாதானமாகி அவளை ஏற்றுக் கொண்டோம். எங்கள் முயற்சியினால் மருமகனுக்கு நல்ல வேலை வாங்கி கொடுத்தோம். சமீபகாலமாக அவர் வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பில் இருக்கிறார். வாரம் ஒருமுறை மட்டுமே மனைவியையும், குழந்தையையும் பார்த்து செல்கிறார். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற எங்கள் மகளை சிரமப்பட்டு காப்பாற்றினோம். கணவரை விவாகரத்து செய்ய அறிவுறுத்தினாலும் அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

தனது கணவர் கொண்டுள்ள தவறான உறவின் காரணமாக, உங்கள் மகள் உணர்ச்சி ரீதியாக அதிர்ச்சி அடைந்து இருப்பார். அதனால்தான் விவாகரத்துக்கான உங்கள் முடிவை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது திருமணத்தைப் பற்றிய எந்த ஒரு முடிவும் அவளது விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் மகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள். உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் அவளை ஆதரியுங்கள். அவளது உணர்ச்சிகள் தணியட்டும். இந்த திருமணத்தை பொறுத்தவரை அவள் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அறிவுபூர்வமாக இருக்கட்டும். அப்போதுதான் அவள் தன் முடிவுக்குப் பொறுப்பேற்று வாழ்க்கையைத் தொடர முடியும். ஒன்றாக வாழ்வதோ, விவாகரத்து செய்வதோ, எந்த முடிவாக இருந்தாலும் அதில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

Tags:    

மேலும் செய்திகள்