வீட்டு உபயோகத்திற்கு உதவும் ஆரஞ்சு பழத்தோல் 'பயோ என்சைம்'

அடுத்தமுறை என்சைம் தயாரிக்கும்போது, ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் என்சைமை புதிதாகத் தயாரிக்கும் கலவையில் சிறிதளவு கலந்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்போது 3 மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. என்சைம் தயாரிக்க 45 நாட்களே போதுமானது.

Update: 2022-09-04 01:30 GMT

ரஞ்சு பழம் சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இதில் இருக்கும் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இந்தப் பழத்தின் மேல் தோல் சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு மற்றும் பல விதங்களில் பயன்படுகிறது. சீசன் சமயத்தில் விலை மலிவாகக் கிடைக்கும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பின்னர் அதன் மேல் தோலை வீணாக்காமல், வீட்டு உபயோகத்திற்கு உதவும் 'பயோ என்சைம்' தயாரிக்கலாம். அதை வீடு துடைக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, கழிவறை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு பழத்தோல் பயோ என்சைம் தயாரிக்கும் முறை இதோ...

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழத்தோல் - 3 பங்கு

எலுமிச்சம்பழம் - 3 பங்கு

நாட்டுச் சர்க்கரை - 1 பங்கு

தண்ணீர் - 10 பங்கு

செய்முறை:

இந்த பொருட்கள் அனைத்தையும் பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து, இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். கண்ணாடி பாட்டிலில் தயாரித்தால், அதிக அளவு வாயு உற்பத்தியாவதால் வெடித்துவிடக்கூடும். ஆகையால், பிளாஸ்டிக் பாட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்தக் கலவையை தினமும் ஒரு முறை திறந்து உடனே மூடி விட வேண்டும். அதிகப்படியான வாயு உற்பத்தி இருந்தால், ஒரு நாளுக்கு இரண்டு முறை திறந்து மூடலாம். இவ்வாறு ஒரு மாதம் தொடர்ந்து செய்ய வேண்டும். அடுத்த இரண்டு மாதங்கள் அந்தக் கலவையை எதுவும் செய்யாமல் அப்படியே வைக்க வேண்டும். பின்பு அதை வடிகட்டிப் பயன்படுத்தலாம்.

அடுத்தமுறை என்சைம் தயாரிக்கும்போது, ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் என்சைமை புதிதாகத் தயாரிக்கும் கலவையில் சிறிதளவு கலந்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்போது 3 மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. என்சைம் தயாரிக்க 45 நாட்களே போதுமானது.

இந்தக் கலவையை, தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். ஆனால், ஷாம்புவிற்கு பதிலாக சிகைக்காய், அரப்பு போன்ற இயற்கையான பொருட்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

இந்த என்சைமை ஒரு வருடம் வரை பாதுகாத்து பயன்படுத்தலாம். இதே முறையில், ஆரஞ்சு பழத் தோலுக்குப் பதிலாக சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரிக் அமிலம் உள்ள பொருட்களைக் கொண்டும் தயாரிக்கலாம். இந்த என்சைம் நுரைக்காது. சிலருக்கு நுரையோடு பயன்படுத்தினால்தான் திருப்தியாக இருக்கும். அவர்கள் என்சைம் தயாரிக்கும்போது பூவந்திக் கொட்டையை அரைத்து கலந்துகொள்ளலாம். 

Tags:    

மேலும் செய்திகள்