பொய்யான நினைவுத்திறன்
ஒருவருக்குள் ஏற்படும் மனப்போராட்டம், வயது முதிர்ச்சி, பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அதில் இருந்து தப்பிச் செல்லுதல், ஆளுமைத்திறன் கோளாறு, மனநலக் குறைபாடு, அன்பிற்கான ஏக்கம், குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பாலியல் கொடுமை அல்லது பாதிப்பு உண்டாக்கிய நிகழ்வுகள் போன்றவை ஆகும்.
நடக்காத ஒரு விஷயத்தை உண்மை என்று கற்பனை செய்து பேசுபவர்களை, வாழ்வில் ஏதோ ஒரு சூழ்நிலையில் சந்தித்திருப்போம். இவ்வாறு பேசுவது ஒருவகையான மனநலக் குறைபாடு ஆகும். இதை 'பொய்யான நினைவுத் திறன்' என்று கூறுவார்கள். இது தொடர்பாக நம்மிடம் பகிர்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் இ.செல்வமணி தினகரன்.
"பொய்யான நினைவாற்றல் என்பது கற்பனையாக சித்தரிக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட நினைவாக இருக்கலாம். இந்த மனநலக் குறைபாடு உள்ளவர்கள் பேசும் தகவல்கள் உண்மை போல தோன்றும். ஆனால் அது முற்றிலும் கற்பனையாக அல்லது உண்மையை மிகைப்படுத்திக் கூறுவதாக இருக்கலாம். அவர்கள் அந்தக் கற்பனையை உண்மை என நம்புவார்கள். மற்றவரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், அனுதாபத்தை பெறுவதற்காகவும் இவ்வாறு பேசுவார்கள். இந்தக் குறைபாடு பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
குழந்தைப் பருவத்தில் இத்தகைய 'பொய்யான நினைவுத் திறன்' மன நலம் சார்ந்த பிரச்சினையால் ஏற்படுகிறது. உதாரணமாக, வகுப்பறையில் ஆசிரியர் சாதாரணமாக திட்டியதை வீட்டில் பெற்றோரிடம் தன்னை ஆசிரியர் அடித்ததாகக் கூறுவார்கள். சில சமயங்களில் வகுப்பறையில் மற்ற மாணவர்களை அடித்ததைப் பார்த்து பயந்து, இவர்களை அடித்ததாக கூறுவார்கள். நடந்ததை மிகைப்படுத்தி அல்லது நடக்காத ஒன்றை கற்பனையாகக் கூறுவர். இந்தப் பொய்யான நினைவுத் திறனால் குழந்தைகளுக்கு 'ஸ்கூல் போபியா' என்று கூறப்படும் பள்ளியைப் பற்றிய பய உணர்வு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பதின்பருவத்தினரிடம் 'பொய்யான நினைவுத் திறன்' அவர்களின் மனப்போராட்டம் அல்லது ஒரு பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்ல அவர்கள் சொல்லும் பொய்யான விஷயங்கள் மூலம் தோன்றுகிறது. உதாரணமாக, கல்லூரி முடித்து வீடு திரும்ப தாமதம் ஆனதற்கான காரணத்தை பெற்றோர் கேட்டால், அந்த நிமிடம் தப்பிப்பதற்காக ஒரு கற்பனையான செய்தியை அல்லது உண்மையாக நடந்ததை மிகைப்படுத்தி கூறுவார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் அதையே உண்மை என்று நம்பி ஒரு பொய்யான நினைவுத் திறனை வளர்த்துக் கொள்வார்கள்.
நடுத்தர வயதினர் அதிகமான மன அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது இத்தகைய பொய்யான நினைவுத் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இக்குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஒருவருக்குள் ஏற்படும் மனப்போராட்டம், வயது முதிர்ச்சி, பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அதில் இருந்து தப்பிச் செல்லுதல், ஆளுமைத்திறன் கோளாறு, மனநலக் குறைபாடு, அன்பிற்கான ஏக்கம், குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பாலியல் கொடுமை அல்லது பாதிப்பு உண்டாக்கிய நிகழ்வுகள் போன்றவை ஆகும்.
இதற்கான சிகிச்சை:
நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தல், தன்னைப் பற்றிய சரியான புரிதல், சரியான வழிநடத்தல், மனநல மருத்துவ ஆலோசனை போன்றவை இதற் கான சிகிச்சைகளாகும்.