வாகனத்தை நிறுத்துவதற்கு ஏற்ற இடம் சொல்லும் செயலி

எனது அக்கா மகன் அரவிந்த் மற்றும் குடும்ப நண்பரின் மகனான நிர்மால்யன் ஆகியோர் இணைந்து முதற்கட்டமாக ‘பார்க்கிங் ஸ்பேஸ் ஆப்’ என்ற செயலியை வடிவமைத்தோம். இதைப் போல இன்னும் சில செயலிகளை வடிவமைக்கும் திட்டம் உள்ளது.;

Update:2022-10-02 07:00 IST

நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இவ்வேளையில், வெளியிடங்களுக்கு செல்லும்போது அவற்றை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான இடம் இல்லாமல் பலர் அவதிப்படுவார்கள். தங்கள் வீட்டில் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் அளவுக்கு இடம் இருப்பவர்கள், அதை சில மணி நேரங்கள் வாடகைக்கு விட முடியும்.

இதன் மூலம் போக்குவரத்து சிக்கல்கள் குறையும். மெட்ரோ ரெயில் நிலையம் வரை வண்டியை ஓட்டிச் சென்று, அதன் அருகில் இருக்கும் வீட்டில் வாகனத்தை நிறுத்த இடமிருந்தால், எல்லா இடங்களுக்கும் தங்கள் வாகனங்களில் பயணிப்பதற்குப் பதிலாக மெட்ரோ சேவைகளை அதிகம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது காற்று மாசைக் குறைக்கும். பெட்ரோல் செலவைக் கட்டுப்படுத்தும்.

இவ்வாறு, நான்கு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு ஏற்ற இடம் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் செல்போன் செயலியை வடிவமைத்திருக்கிறார், திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த லாவண்யா சுந்தரராஜன்.

அவருடன் நடந்த உரையாடல் இதோ…

"அரசு பள்ளியில் படித்த எனக்கு கல்வியின் மீது ஆர்வம் அதிகம். திருமணம் ஆன பின்னரும் விடாமுயற்சியுடன் தொழில்நுட்ப மேல் படிப்பை முடித்து மென்பொருள் துறையில் நுழைந்தேன். கணவர் மனோகரன் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

மென்பொருள் துறையில் பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இந்த அனுபவத்தால் காற்றில் உலவும் கதிரியக்க அலைகளில் இருந்து கைப்பேசி, மடிக்கணினிகளை மின்னேற்றம் செய்யும் கருவியைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதற்குத் தேவையான பொருளீட்ட எளிமையான வழியாக கைப்பேசி செயலிகளை வடிவமைத்து சந்தைப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன்.

எனது அக்கா மகன் அரவிந்த் மற்றும் குடும்ப நண்பரின் மகனான நிர்மால்யன் ஆகியோர் இணைந்து முதற்கட்டமாக 'பார்க்கிங் ஸ்பேஸ் ஆப்' என்ற செயலியை வடிவமைத்தோம். இதைப் போல இன்னும் சில செயலிகளை வடிவமைக்கும் திட்டம் உள்ளது.

நாங்கள் மூவரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். எனவே, வார இறுதிகளில் மட்டுமே இந்த செயலியை உருவாக்கும் செயல் திட்டங்களை, மென்பொருள் கோட்பாடுகளைச் செய்தோம். சென்னை, ஈரோடு, பெங்களூரு என்று வெவ்வேறு இடங்களில் வசித்ததால், எங்களது சந்திப்பு இணைய வழியாகவே நடந்தது. எனது முயற்சிக்கு கணவர் உறுதுணையாக இருந்தார்.

தற்சமயம் இந்த செயலி ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் மட்டுமே செயல்படும். விரைவில் ஆப்பிள் கைப்பேசிகளுக்கான செயலியும் வடிவமைக்க இருக்கிறேன்.

விடா முயற்சியும், அயராத நம்பிக்கையும் மட்டுமே எனது எண்ணத்தை செயலாக்கி இருக்கிறது. இதைத் தவிர குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் தொழில்நுட்பம் சார்ந்த பத்து கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இதுவும் விரைவில் புத்தகமாக வெளிவரும்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுமென்ற ஆவல் இருக்கிறது. எனது அடுத்தடுத்த செயலிகள், இல்லத்தரசிகள், பெண்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கும் வகையில் இருக்கும்" என்று தன்னம்பிக்கையோடு தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்