பழைய ஆடைகளை புதிதாக வடிவமைத்து வருமானம் ஈட்டலாம்
ஆடை வடிவமைப்பைக் கற்றுத் தேர்ந்தவர், அதை தொழிலாக செய்யலாம் என்று முயற்சித்தபோது அவருக்குள் ஒரு யோசனை தோன்றியது. ‘பெண் குழந்தை களுக்கு விதவிதமான உடைகள் கிடைக்கும். ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட டிசைன் மட்டுமே கிடைக்கும்.;
குழந்தைகள் வளர்ந்து விட்டதால் அணியமுடியாமல் போனவை, சற்றே எடை கூடியதால் அணியாமல் ஒதுக்கி வைத்தவை, சிறிய அளவில் சேதமானதால் என்ன செய்வதென்று தெரியாமல் அலமாரியில் அடுக்கியவை என்று, தூக்கியெறிய மனமில்லாமல் வைத்திருக்கும் ஆடைகளை, தனது கற்பனையால் புதிதாக வேறொரு வடிவில் அணியத் தகுந்ததாக மாற்றி அமைப்பதில் வல்லவராக இருக்கிறார் சத்யபிரியா.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சத்யபிரியா, பிசியோதெரபி தொழிற்கல்வி முடித்தவர். குடும்ப பொறுப்புகளையும், ஆண், பெண் என இரண்டு சிறு வயது குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்காக வீட்டிலேயே இருந்தார். அந்த சமயத்தில் பேஷன் டிசைனிங் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தபோது, அதை தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டார்.
ஆடை வடிவமைப்பைக் கற்றுத் தேர்ந்தவர், அதை தொழிலாக செய்யலாம் என்று முயற்சித்தபோது அவருக்குள் ஒரு யோசனை தோன்றியது. 'பெண் குழந்தை களுக்கு விதவிதமான உடைகள் கிடைக்கும். ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட டிசைன் மட்டுமே கிடைக்கும். ஆகையால், ஆண் குழந்தைகளுக்கு விதவிதமாக ஆடைகள் தைத்து கொடுக்கலாம்' என்று முடிவெடுத்தார்.
வீட்டு வேலையை முடித்துவிட்டு குழந்தைகள் தூங்கும்போதும், விளையாடும் போதும் கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் ஆடைகள் தைக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் மட்டும் தைத்துக் கொண்டு இருந்தார்.
அந்த நேரத்தில்தான் கொரோனா ஊரடங்கு வந்தது. அப்போது அவருடைய தோழி தனது நிச்சயதார்த்தத்துக்கு ரவிக்கை தைத்து தருமாறு கேட்டார். இக்கட் டான சூழலைப் புரிந்து கொண்டு தன் தோழிக்காகத் தைத்து கொடுத்தார். அதன்பிறகு உறவினர்கள், நண்பர்கள் என்று பலருக்கு ஆடைகள் தைத்துக்கொடுக்கத் தொடங்கினார். குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரே நிறத்திலான துணியில், வெவ்வேறு வகையான ஆடைகள் தைத்துக்கொடுப்பதில் இவர் கைதேர்ந்தவர்.
அப்போதுதான், அணியவும் முடியாமல், தூக்கியெறியவும் மனமில்லாமல் சென்டிமென்டாக வைத்திருக்கும் ஆடைகளை மாற்றி வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். அவ்வாறே புடவைகளில் இருந்து லெகங்கா, பழைய ஜீன்ஸ் சட்டையில் இருந்து குழந்தைகள் அணியும் கவுன், குட்டை பாவாடையில் இருந்து ஹாண்ட்பேக் என தனது கற்பனைக்கு ஏற்றதுபோல வடிவமைக்க ஆரம்பித்தார்.
கிடைக்கும் நேரத்தில் இவ்வாறு வடிவமைத்துக் கொண்டிருந்தவருக்கு, ஆர்டர்கள் அதிகமாக வர ஆரம்பித்ததால் இதையே பிரதானமாக செய்ய ஆரம்பித்துவிட்டார். தற்போது உதவிக்காக இரண்டு பெண்களையும் நியமித்துள்ளார்.
நிறைவான வருமானம் வரும் தனது தொழிலை, விரிவாக்கும் திட்டத்தை தற்போது மேற்கொண்டு வருகிறார். "கற்பனைத் திறனை பயன்படுத்தி முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமாகும்" என்கிறார் சத்யபிரியா.