கலைநயமிக்க காஷ்மீர் சால்வை

இந்த சால்வையில் இருந்து வெளிப்படும் வெப்பம், ஒரு முட்டையே குஞ்சு பொரிக்கும் அளவிற்கு இருக்கும் என குறிப்பிடப்படுகிறது

Update: 2023-01-08 01:30 GMT

ல நூற்றாண்டுகளாக காஷ்மீர் மாநிலத்தின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக இருப்பது 'பஷ்மினா சால்வை'. விழாக்கள், பண்டிகைகளின்போது இந்த சால்வையைப் பரிசளிப்பது கவுரவமாகக் கருதப்படுகிறது. பாரம்பரியம் நிறைந்த 'பஷ்மினா சால்வை' பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

'பஷ்மினா' என்ற வார்த்தை பாரசீக மொழியில் இருந்து உருவானது. அந்த மொழியில், 'பஷ்ம்' என்றால் 'மென்மையான தங்கம்' என்று பொருள். 'பஷ்மினா' சால்வை தயாரிக்கப் பயன்படுத்தும் கம்பளி மிகவும் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

இந்த சால்வையை அணியும்போது கதகதப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். காஷ்மீர் நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த சால்வையில் இருந்து வெளிப்படும் வெப்பம், ஒரு முட்டையே குஞ்சு பொரிக்கும் அளவிற்கு இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.

'பஷ்மினா' சால்வை முழுவதும் கைகளாலேயே நெசவு செய்து தயாரிக்கப்படுகிறது. ஒரு சால்வை தயாரிக்க குறைந்தபட்சம் 10 நாட்கள் வரை ஆகிறது. 'பஷ்மினா' சால்வை தயாரிப்பதற்கு லடாக்கில் இருந்து வரும் 'காஷ்மீர் கம்பளி' பயன்படுத்தப்படுகிறது. லடாக்கின் உயரமான பகுதியில் காணப்படும் 'சாங்தாங்கி' என்ற ஆடுகளின் ரோமங்களில் இருந்து இந்த கம்பளி எடுக்கப்படுகிறது. இதற்காகவே இந்த ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.

'சாங்தாங்கி' ஆடுகளின் ரோமம், 'பைபர்' பள்ளத்தாக்கில் வாழும் பழங்குடிப் பெண்களால் சுத்தம் செய்யப்படுகிறது. பின்பு அதை சுத்தமான கம்பளி கட்டிகளாக நூற்பாலைக்குக் கொண்டு செல்கின்றனர். அங்கு, கம்பளியை நூலாக மாற்றி நெசவு செய்து அழகிய சால்வையாக மாற்றுகின்றனர்.

இந்த சால்வை உருவானதில் சில சுவாரசியங்கள் உள்ளன. 15-ம் நுாற்றாண்டில், சையத் அலி ஹம்தான் என்ற சூபி துறவி காஷ்மீருக்கு வந்தார். அவர் லடாக்பகுதியை அடைந்தவுடன் 'சாங்தாங்கி' ஆட்டின் உடலில் மென்மையான ரோமம் கம்பளி போல் வளர்ந்திருப்பதைக் கண்டார்.

ஆர்வத்தின் காரணமாக உடனடியாக அக்கம்பளியால் ஒரு ஜோடி காலுறைகளை தயாரிக்க உத்தரவிட்டார். காலுறைகள் தயாரிக்கப்பட்டு அப்போதைய காஷ்மீர் அரசர் ஜைன் உல் அபிதீனுக்கு வழங்கப்பட்டது.

அரசர், காலுறைகளின் தரத்தால் ஈர்க்கப்பட்டார். எனவே, 'சாங்தாங்கி' ஆட்டில் இருந்து எடுக்கப்படும் ரோமங்களைப் பதப்படுத்த உத்தரவிட்டார். இதுதான், காஷ்மீரில் 'பஷ்மினா சால்வை' தயாரிப்பின் ஆரம்பம். அந்த நேரத்தில் சால்வைகள் சாதாரணமாகவும், மலர், விலங்கினங்கள் மற்றும் பல வடிவங்களுடன் எம்பிராய்டரி செய்யப்பட்டன.

அதன்பின்பு, 16-ம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் இதன் சிறப்பு பரவியது. நாட்டை ஆண்ட பல அரசர்களுக்கு 'பஷ்மினா சால்வை' பரிசாக வழங்கப்பட்டது. அதற்கேற்ப இதில் பல கலை நயங்கள் புகுத்தப்பட்டன. 'பஷ்மினா சால்வை' மன்னர்களைக் கவுரவிக்கும் பொருளாக மதிக்கப்பட்டது. பேரரசர்கள் தங்கள் மனைவிகளைக் கவர இதைப் பரிசாக வழங்கி வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்