குளியல் அறையை 'பளிச்' என மாற்றும் தொழில்நுட்பங்கள்
ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர் போன்ற ‘வாட்டர் ஹாக்’ ஸ்மார்ட் தொழில்நுட்பம் தண்ணீர் அதிகம் வீணாகாமல் தடுக்கும். இதில் உள்ள ‘மின்சார டிஸ்பிளே’ குளிக்கும் நீரின் வெப்பநிலையைக் காண்பிக்கும்.;
வீட்டில், நம் பயன்பாடு அதிகமாக இருக்கும் பகுதி குளியல் அறை. இதைச் சுத்தமாக வைத்திருப்பது பலருக்கும் பெரிய சவாலாகவே இருக்கும். இந்த வேலையை எளிதாக்குவதற்கு தற்போதைய நவீன தொழில்நுட்பம் கைக்கொடுக்கிறது. இதன் மூலம் நமது நேரம் மிச்சமாகும். சுகாதாரம் மேம்படும். அத்தகைய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
சென்சார் சோப் டிஸ்பென்சர்:
கைகளை சுத்தப்படுத்துவதற்கு உபயோகிக்கும் சோப்புக் கட்டிகளை, அனைவரும் தொட்டு பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, திரவ சோப்புகளை பாட்டிலில் அடைத்து பயன்படுத்தினோம். அந்த பாட்டிலை கைகளால் அழுத்தி சோப் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டதே 'சென்சார் சோப் டிஸ்பென்சர்'.
நம் கையை இந்த டிஸ்பென்சர் முன் நெருக்கமாக நீட்டும் போது, 0.25 விநாடிகளில் கைகளில் சோப்பு விழும். இதற்காக கொடுக்கப்படும் திரவ சோப்பை டிஸ்பென்சரில் நிரப்பி இயக்க வேண்டும். இது 4 பேட்டரிகளின் உதவியுடன் செயல்படும். தொடர்ந்து 9 மாதங்கள், 400 முறை இதை பயன்படுத்த முடியும்.
வாட்டர் ஹாக்:
ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர் போன்ற 'வாட்டர் ஹாக்' ஸ்மார்ட் தொழில்நுட்பம் தண்ணீர் அதிகம் வீணாகாமல் தடுக்கும். இதில் உள்ள 'மின்சார டிஸ்பிளே' குளிக்கும் நீரின் வெப்பநிலையைக் காண்பிக்கும்.
இந்தக் கருவியில் குளிக்கும் நேரத்தையும் நாம் பதிவிட முடியும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஷவரின் வழியாக தண்ணீர் வருவது நின்றுவிடும். இதனால், தண்ணீர் அதிகமாக செலவு செய்வதை தவிர்க்க முடியும். மேலும், இதில் விரும்பிய நிறத்தில் விளக்குகளையும் ஒளிர விடலாம்.
டாய்லெட் கிளீனிங் ரோபோ:
கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளதுதான் 'டாய்லெட் கிளீனிங் ரோபோ'. இதனுடன், சார்ஜ் செய்யும் ஓர் உபகரணமும் வழங்கப்படும். அதைக் கொண்டு, சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால், 3 முறை பயன்படுத்த முடியும். இதில், கொடுத்துள்ள இணைப்பை டாய்லெட்டில் பொருத்தி, இந்த ரோபோவை கழிவறைக்குள் இறக்கி விட வேண்டும். இதில், கொடுக்கப்பட்டிருக்கும் பெரிய பிரஷ், சுத்தம் செய்ய முடியாத பகுதிகளில் கூட எளிமையாக சுத்தம் செய்யும். இதில், 3 பிரஷ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை கழிப்பறையின் அளவிற்கேற்ப பொருத்திக் கொள்ளலாம்.
ஸ்பின் ஸ்கிரப்பர்:
குளியல் அறையில், சுவர் மற்றும் தரையில் உள்ள டைல்ஸ், வாஷ்பேஷின் ஆகியவற்றில் எளிதில் கறை படியும். இதைக் கையால் தேய்த்து சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். அந்த வேலையை எளிமையாக்க வந்திருப்பது தான் எலக்ட்ரிக் ஸ்பின் ஸ்கிரப்பர். 360 டிகிரியில் சுழலும் வகையில், 3 விதமான பிரஷ் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 முறை எளிதாகப் பயன்படுத்தலாம். இதை அரைமணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும்.