தஞ்சை ஓவியங்களில் முத்திரை பதிக்கும் சோபியா

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் யாக சாலையில் முருகன் மற்றும் சிவன் பார்வதி ஓவியங்களை வரைந்தேன். வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக அதைக் கருதினேன்.;

Update:2022-06-12 07:00 IST

"தனித்திறமைகளில் நம்பிக்கை இருந்தால், அதனை ஒரு தொழிலாக மாற்றி வாழ்க்கையில் சாதிக்கலாம்" என புன்னகையோடு கூறுகிறார் சோபியா. தனக்குள் பொதிந்துகிடந்த ஓவியத் திறமையை மெருகேற்றி வெற்றிகரமான தொழிலாகச் செய்து வருகிறார். தனது அனுபவங்கள் குறித்து இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

"நான் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூரில் தான். தஞ்சை அரண்மனை அருகில் எங்கள் வீடு இருந்தது. அரண்மனையின் அழகையும், அதில் இடம் பெற்றிருந்த தஞ்சை ஓவியங்களையும் பார்த்து வளர்ந்ததால் ஓவியங்கள் மீது இயல்பாகவே ஈடுபாடு இருந்தது. கல்லூரிப் படிப்பை (பி.சி.ஏ) முடித்தவுடன் திருமணம் நடந்தது. பின்பு மத்திய அரசின் கைவினைக் கலைஞர் திட்டத்தில் சேர்ந்து, தஞ்சை ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டேன்.

தேசிய விருது பெற்ற வெங்கடேஷா ராஜா தான் என்னுடைய குரு. ஆறு மாத காலம் இந்த திட்டத்தில் தஞ்சை ஓவியங்கள் குறித்து கற்றுக்கொண்டேன். இந்த ஓவியங்களுக்குப் பின்னால் இருக்கும் வரலாறுகளையும், ஓவியம் வரையும் பழமையான முறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு ஓவியங்கள் குறித்த புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை 'சரஸ்வதி மகால்' நூலகத்திற்குச் சென்று ஆய்வு செய்தேன். அதனைத் தொடர்ந்து நுண்கலைத் துறையில் டிப்ளமோ படித்தேன்.

நான் தஞ்சை ஓவியங்கள் வரைய ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே, நண்பர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. என் கணவர் ராஜேஷ் சிங்கப்பூரில் பணியாற்றி வருவதால், அவர் மூலம் அங்குள்ள நண்பர்களுக்கும் விற்பனை செய்யத் தொடங்கினேன். இவ்வாறு, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஓவியங்களை வரைந்து விற்பனை செய்து வருகிறேன்.

முன்பு 'வெண்ணெய் உண்ணும் கண்ணன்', 'ஆலிலைமேல் உட்கார்ந்திருக்கும் கண்ணன்', 'ராமர் பட்டாபிசேகம்', 'தேவியர் உருவங்கள்' போன்ற ஓவியங்கள் பெரும்பாலும் படைக்கப்பட்டன. ஆனால், இப்போது பல்வேறு தெய்வ உருவங்கள் உருவாக்கப்படுகின்றன.

தஞ்சாவூர் ஓவியங்கள் பெரும்பாலும் மா அல்லது பலா மரத்தின் பலகைகளில் தான் வரையப்படுகின்றன. படம் வரைவதற்கான பலகையை தயார்படுத்தும் விதமே வித்தியாசமானது. துணி ஒட்டுவது, மட்டி அடிப்பது, மாவு தடவுவது என அதில் பல வேலை இருக்கிறது. இயற்கையான வண்ணங்கள், கற்கள், கண்ணாடி, மாவு, பலகை என அனைத்தும் தயாராகிவிட்டால், படம் வரைய ஆரம்பித்து விட வேண்டியது தான்.

பழமையான முறையைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்து வருகிறேன். ஒரு ஓவியம் தயார் செய்து முடிக்க, இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் கூட ஆகும்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் யாக சாலையில் முருகன் மற்றும் சிவன் பார்வதி ஓவியங்களை வரைந்தேன். வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக அதைக் கருதினேன்.

தஞ்சை ஓவியங்களுக்காக பூம்புகாரில் 'அடுத்த தலைமுறை கலைஞர் விருது', 'திறன் விருது' போன்ற பல விருதுகளை வாங்கி இருக்கிறேன். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்'' என்றார் சோபியா.

Tags:    

மேலும் செய்திகள்