அன்பை தெரிவிக்க உதவும் அழகுச் செடிகள்

எளிதில் கிடைக்காத தாவரங்களை வடமாநிலங்களுக்குச் சென்று வாங்கி வைத்திருப்பதும் எங்கள் வெற்றிக்கு ஒரு காரணம். பிளாஸ்டிக்கை அறவே ஒதுக்கி விடுகிறோம். செராமிக் பூந்தொட்டிகள் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து, செராமிக் தொட்டிகளில் செடிகளை வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். நன்றாக வளரும்.

Update: 2022-09-11 01:30 GMT

"செல்லப் பிராணிகள் வளர்ப்பது போல, குட்டிக் குட்டி செடிகளைத் தங்கள் வீட்டில் வளர்ப்பதும் பெண்களின் விருப்பமான பொழுதுபோக்காக மாறி வருகிறது. இவ்வகைச் செடிகள்

வீட்டுக்கு அழகு சேர்ப்பது மட்டுமில்லாமல், அறையின் காற்றை சுத்திகரிக்கும் பணியையும் செய்கின்றன" என்கிறார்கள் கோயம்புத்துார் கணபதி பகுதியைச் சேர்ந்த தோழிகள் வித்யா மற்றும் அனிதா. இவர்களில் அனிதா மென்பொருள் பொறியாளர். வித்யா ஆங்கில மருத்துவர்.

"நாங்கள் இருவரும் நெருக்கமான தோழிகள். எங்களின் துறை வேறாக இருந்தாலும் ஒருமித்த கருத்துள்ளவர்கள் என்பதால், காற்று மாசுபாடு தவிர்க்க, சமூக அக்கறையுடன் இந்த இன்டோர் தாவரங்கள் மற்றும் செராமிக் பூந்தொட்டிகள் விற்பனைக் கூடத்தை இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறோம்.

இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பதால், குடும்ப நண்பர்களாகி இப்போது தொழிலிலும் வெற்றிகரமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்று கூறிய அனிதா மேலும் தொடரும்போது,

''பிறந்த நாள் பரிசு, வி.ஐ.பி-க்களைப் பார்க்கும்போது மரியாதை நிமித்தமாகத் தருவது, திருமணம் மற்றும் திருமண வரவேற்பிற்கு வருபவர்களுக்கு நினைவுப் பரிசாக வெற்றிலை, தாம்பூலம் உடன் தருவது எனப் பலவற்றிற்கும் இந்த செடிகளைக் கொடுக்கலாம்.

முன்பு பரிசாக 'மரக்கன்று' தந்து வந்தார்கள்.

இப்போது அபார்ட்மெண்ட்கள் பெருகி விட்டதால் மரக்கன்றுகளை நடுவதற்கு போதிய இடம் இல்லை. அதனால் இதுபோன்ற அழகுச் செடிகளைத்தான் வாங்கிச் செல்கிறார்கள்'' என்கிறார்.

வித்யா கூறும்போது, "அறைக்குள்ளே வளர்க்கக்கூடிய இத்தகைய செடிகள், வீட்டில் பரவும் காற்றில் இருக்கும் நச்சுக்களையும், ரசாயனங்களையும் சுத்திகரிக்கின்றன. இதன் மூலம் ஆரோக்கிய வாழ்வை மக்கள் பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார்.

செடி வகைகள் பற்றி அனிதா கூறும் போது, ''அறைகளுக்குள் வளர்க்கக்கூடிய சக்குலன்ட் வகை செடிகள் பரிசுப் பொருளாகத் தருவதற்கு உகந்தது. வீட்டில் மேஜை மீது குட்டிக்குட்டி சக்குலன்ட் தாவரங்களை வைத்து 'மினி தோட்டம்' உருவாக்க முடியும். இவற்றை பராமரிப்பதும் எளிது. தண்ணீர் இல்லாமலே இவை நீண்ட நாட்கள் உயிர் வாழும்.

பங்களா, சாதாரண வீடுகள் முதல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை இவற்றை வளர்க்கிறார்கள். கல்லூரி, பள்ளி, விடுதி மாணவர்களும் படிக்கும்போது ஏற்படும் மன அழுத்தம் நீங்க இந்தச் செடிகளை தங்கள் அறைகளில் வளர்க்கிறார்கள்'' என்கிறார்.

வித்யா கூறும் போது, ''அன்பளிப்பாக பூங்கொத்து கொடுத்தால் அது இரண்டு மூன்று நாட்களிலே உலர்ந்து வீணாகி விடும். ஆனால், இதுபோன்ற தாவரங்களை பரிசாகத் தந்தால், பரிசு பெற்றவருக்கு வாழ்நாள் முழுவதும் வளரும் நினைவாகிவிடும்'' என்கிறார்.

"எளிதில் கிடைக்காத தாவரங்களை வடமாநிலங்களுக்குச் சென்று வாங்கி வைத்திருப்பதும் எங்கள் வெற்றிக்கு ஒரு காரணம். பிளாஸ்டிக்கை அறவே ஒதுக்கி விடுகிறோம். செராமிக் பூந்தொட்டிகள் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து, செராமிக் தொட்டிகளில் செடிகளை வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். நன்றாக வளரும்.

இந்தியாவில் மண்பாண்ட தொழிலை நம்பி பல குடும்பங்கள் வாழ்கின்றன. வெளிநாட்டு பரிசுகளை ஆதரிக்காமல், நம் நாட்டு தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டும். சைனா கிளே எனும் பீங்கானை ஒதுக்க வேண்டும். இதனால் சுற்றுச்சூழலுக்கும் நன்மை உண்டாகும்" என்று கூறும் தோழிகள் இருவரும் வீடு முழுவதையும் பசுமையாக்கும் உள் அலங்கார வேலையையும் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்