ஓவியத்தில் ஒன்றிய காதல்
ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்ததும் 18 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. பின்பு குடும்ப நிர்வாகம், பிள்ளைகள் வளர்ப்பு என்று நாட்கள் ஓடியது. குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு போனதும், பேப்ரிக் பெயிண்டிங் கற்றுக்கொண்டேன்.;
தகதகவென தங்கத்தில் மின்னும் தஞ்சாவூர் ஓவியம், கைவினைப் பொருட்கள், கலை அலங்கார ஓவியங்கள் என கண்காட்சிக் கூடமாக காட்சி அளிக்கிறது, கமலா ராஜனின் வீடு.
தடுமாறும் வயதிலும் தளராத கலை தேடல் கொண்டு, எண்ணற்ற கலைகளை கற்ற 80 வயது மங்கையான கமலா, இப்பொழுதும் புதிதாக ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார். அவரது பேட்டி…
''1940-ம் ஆண்டு திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே சாவக்காடு எனும் குக்கிராமத்தில் பிறந்தேன். அம்மா புரட்சிகரமான எண்ணங்கள் கொண்டவர். 'பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது' என்ற அப்பாவின் கட்டுப்பாடுகளை உடைத்தார். அம்மாவின் துணையில்லாமல் நானும், எனது சகோதரிகளும் கல்வி கற்றிருக்க முடியாது.
நான் சிறுவயதில் இருந்தே நாளிதழ்கள் அதிகம் படிப்பேன். அவற்றில் உள்ள படங்களைப் பார்த்து சில மாற்றங்கள் செய்து வரைவேன். அவ்வாறுதான் தொடங்கியது என் கலை பயணம்.
எட்டாவது படித்தபோது எனது ஓவியத்தை, ஓவிய ஆசிரியர், அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் பார்வைக்கு அனுப்பி வைத்தார். குடியரசு தலைவர் தனது கையெழுத்து போட்டு பாராட்டு சான்றிதழ் அனுப்பினார்.
ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்ததும் 18 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. பின்பு குடும்ப நிர்வாகம், பிள்ளைகள் வளர்ப்பு என்று நாட்கள் ஓடியது. குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு போனதும், பேப்ரிக் பெயிண்டிங் கற்றுக்கொண்டேன்.
பிள்ளைகள் வளர்ந்து, அவர்களது வேலை, குடும்பம் என்று போன பிறகு எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதை புதிதாக கலைகளை கற்றுக்கொள்ள பயன்படுத்த எண்ணினேன். அறுபது வயதுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வந்து, தஞ்சாவூர் ஓவியத்தை முறையாகப் பயின்றேன்.
மேலும் தையல், எம்பிராய்டரி, கிளாஸ் பெயிண்டிங், கலம்காரி, நிப் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங் என பல கலைகளை கற்றுக் கொண்டேன்.
ஒரு ஓவியத்திற்கு முகம் முக்கியம். எனவே முகங்கள் வரைவதில் கைதேர்ந்திருந்தேன். கடவுள் உருவங்களை வரையும் போது நகைகளை துல்லியமாக அலங்கரிப்பேன். ரவிவர்மா ஓவியங்களை அப்படியே வரையாமல், எனது கற்பனைக்கு ஏற்ப மாறுதல்கள் செய்து வரைந்துள்ளேன்.
எனது ஓவியங்களை விற்பனை செய்ததில்லை. தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பேன்.
வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், தஞ்சாவூர் ஓவியம் என நான் வரைந்த 90 படங்களை கொண்டு 2016-ம் ஆண்டு எனது மகன் கண்காட்சி நடத்தினார்.
ஓவியம் மட்டுமில்லாமல், புதுக்க விதை, மரபுக் கவிதை, கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன். அவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.
இளைய சமுதாய பெண்கள், என்னைப்போல தனக்கு விருப்பப்பட்ட விஷயத்தை செய்ய வேண்டும். திறமைகளை தனக்குள் ஒளித்து வைக்கக்கூடாது. புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். நான் இப்போதும் புதிய கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறேன்" என்று உற்சாகமாகக் கூறினார் கமலா ராஜன்.