காமன்வெல்த் ஈட்டி எறிதல் : இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்று சாதனை
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.;
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 16 தங்கம், 12 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளது.
10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம், மும்முறை தாண்டுதலில் 2 பதக்கம் என அசத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இறுதி போட்டியில் அவர் 60 மீ தூரம் ஈட்டி வீசி வெண்கலம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.