காமன்வெல்த் போட்டி : தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச்செல்வது மிகப்பெரிய கவுரவம் -பி.வி.சிந்து

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்வது மிகப்பெரிய கவுரவம் என பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-07-28 09:06 GMT

புதுடெல்லி,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். இந்தநிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, இந்திய அணியின் கொடியை ஏந்திச்செல்வார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்வது மிகப்பெரிய கவுரவம் என பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ;

அணியை வழிநடத்தி, கொடியை ஏந்தி செல்லும் பொறுப்பு எனக்குக் கிடைத்திருப்பது மிகப் பெரிய கவுரவம். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் எனது சக குழுவினர் அனைவருக்கும் போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். என்னை கொடி ஏந்தி செல்ல தேர்வு செய்ததற்காக (இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று சிந்து கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்