காமன்வெல்த் மல்யுத்தம் : இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதி

தீபக், பஜ்ரங் புனியா, சாக்சி, அன்ஷு மாலிக் ஆகிய நால்வரும் தலா ஒரு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

Update: 2022-08-05 14:45 GMT

Image Tweeted By @Media_SAI

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது. 8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்றன.

இதில் இன்று முன்னதாக நடைபெற்ற காலிறுதியில் தீபக் புனியா, ஷேகு கசெக்பாமாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அதே போல் முன்னணி வீரர் பஜ்ரங் புனியா காலிறுதியில் எளிதாக வெற்றி பெற்றார். அதே போல் பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இங்கிலாந்தின் கெல்சி பார்ன்ஸை வீழ்த்தி இந்தியாவின் சாக்சி மாலிக் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு வீராங்கனை அன்ஷு மாலிக் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஐரீன் சிமியோனிடிஸை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதை தொடர்ந்து இந்திய போட்டியாளர்கள் தங்கள் அரையிறுதி போட்டியில் விளையாடினர். இதில் பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சாக்சி மாலிக் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அதே போல் பஜ்ரங் புனியா 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இங்கிலாந்தின் ஜார்ஜ் ராம்மை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தீபக் புனியா 86 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் கனடாவின் அலெக்சாண்டர் மூரை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டிக்குள் நுழைந்து 4 போட்டியாளர்களும் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்