அரக்கத்தனமான நடிப்பில் மிரட்டிய விக்ரம்: 'தங்கலான்' - விமர்சனம்

'தங்கலானுக்கு' மிரட்டலாக உயிர் கொடுத்திருக்கிறார் விக்ரம்.

Update: 2024-08-16 02:07 GMT

சென்னை,

18-ம் நூற்றாண்டில் இக்கதை நிகழ்கிறது. வட ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து தனது குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார் விக்ரம். பின்னர் கிராம மக்களின் நிலங்களை சூழ்ச்சியால் ஜமீன்தார் அபகரிக்க, அங்கு அடிமையாக்கப்படுகின்றனர். அப்போது, கிளமென்ட் என்ற வெள்ளைக்காரர், கோலர் பகுதியில் தங்கம் இருப்பதை அறிந்து விக்ரமிடம் தங்கத்தை எடுத்து தந்தால் அதில் பங்கு தருவதாக கூறுகிறார்.

அதையேற்று, தனது கூட்டத்தில் சிலருடன் புறப்படுகிறார் விக்ரம். இந்தப் பயணத்தில் அவர்களுக்குத் தங்கம் கிடைத்ததா, இப்பயணம் அம்மக்களின் வாழ்கையை எப்படி மாற்றுகிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது ரஞ்சித்தின் 'தங்கலான்'.

உணர்வுபூர்வமான இடங்களிலும், ஆக்சன் காட்சிகளிலும் தன் தனித்த உடல்மொழியாலும் அரக்கத்தனமான நடிப்பாலும் அக்காலத்தைச் சேர்ந்த 'தங்கலானுக்கு' மிரட்டலாக உயிர் கொடுத்திருக்கிறார் விக்ரம்.

விக்ரம் மனைவியாக வரும் பார்வதி தனது யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மாளவிகா மேனனின் நடிப்பில் பல கேள்விகள் எழுந்தநிலையில், ஆக்ரோஷமான ஆக்சன் வில்லியாகச் சண்டைக் காட்சிகளிலும், மிரட்டல் காட்சிகளிலும் நியாயம் செய்திருக்கிறார்.

துணை கதாப்பாத்திரங்களாக வரும் பசுபதி உள்ளிட்ட அனைத்து கதாப்பாத்திரங்களும் மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு நடித்திருப்பது பெரும் பாராட்டுக்கு உரித்தானதுதான். ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் பா.ரஞ்சித் பட வரிசைகளில் புதுமையைக் கொடுத்துள்ளன.

முக்கியமாகச் சண்டைக்காட்சிகளில் கிஷோரின் கை ஓங்கியிருக்கிறது. பிற்பகுதியில் சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் நகர்ந்து போவது பலகீனம். வரலாற்று பின்னணியில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தி தரமான படைப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

Tags:    

மேலும் செய்திகள்