'விடுதலை 2' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

முதல் பாகத்தில் போராளி குழுவின் தலைவரான பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுவது பற்றிய கதையைச் சொன்னார்கள்.

Update: 2024-12-21 01:43 GMT

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து, இதன் இரண்டாவது பாகம்  உருவாகியுள்ளது.

இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் நேற்று வெளியனது. இந்த நிலையில், விடுதலை 2 படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

முதல் பாகத்தில் போராளி குழுவின் தலைவரான பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுவது பற்றிய கதையைச் சொன்னார்கள். தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகத்தில் கைது செய்யப்பட்ட பெருமாள் விசாரணைக்கு பின் ஒரு காட்டு வழியாக கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

காவல் அதிகாரியான சூரிக்கு அந்த காடு பரிச்சயமானதால் அவரும் செல்கிறார். இந்த சமயத்தில் வாத்தியார் விஜய் சேதுபதி, தன்னுடைய முன் கதையை சொல்ல துவங்குகிறார். விஜய் சேதுபதியால் அதிகாரத்தையும், அரசாங்கத்தையும் எதிர்க்க முடிந்ததா? அவருடைய முடிவு என்ன? விஜய் சேதுபதியின் கதையை கேட்ட சூரி யார் பக்கம் நின்றார்? என்பது மீதி கதை.

பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் தன்னை மிக அழகாக பொருத்தி கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் அசத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது மனைவியாக வரும் மஞ்சு வாரியர், தைரியமும், தெளிவும் நிறைந்த பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். போராட்ட களத்துக்கு நடுவில் விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர் இருவரிடையே மலரும் காதல் சிலிர்க்க வைக்கிறது.

கவுதம் மேனன், சேத்தன், அருள்தாஸ், வின்சென்ட் அசோகன், தமிழ், போஸ் வெங்கட் என அனைவரும் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள். கிஷோர், இளவரசு, ராஜீவ்மேனன், சரவண சுப்பையா, பாலாஜி சக்திவேல், கென் என அனைவரும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்கள்.

அதிகாரத்தை நியாய கூண்டில் ஏற்றி கேள்வி கேட்கும் ஒவ்வொரு வசனங்களும் படத்தின் ஆகச் சிறந்த பலம். இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசையில் தியேட்டர் அதிர்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு வேற லெவல். எடிட்டிங் சிறப்பு. ஆனால், ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் பலகீனம்.

தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூர மரணங்கள் என பிணைந்திருக்கும் இயக்கவாதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியதோடு, ஓர் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

Tags:    

மேலும் செய்திகள்