பத்திரிகையாளரை தாக்கிய வழக்கு - நடிகர் மோகன்பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு

பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் நடிகர் மோகன்பாபுவுக்கு முன் ஜாமீன் வழங்க தெலுங்கானா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-12-21 03:38 GMT

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவருக்கு  விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த புதன் கிழமையன்று(11.12.2024) மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றிருக்கிறார். ஆனால். மோகன் பாபு வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் அதனை முறியடித்தனர்.

அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்களை மைக்கை வைத்து மோகன் பாபு தாக்கினார். இதில் காயமடைந்த 2 பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தெலுங்கானா பத்திரிகையாளர் சங்கம் போலீசில் புகார் அளித்தது. அதனைத்தொடர்ந்து, நடிகர் மோகன் பாபு மீது தெலுங்கானா போலீசார் 118 பிஎன்எஸ் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி வரும் மோகன்பாபு, வழக்கு விசாரணைக்கு வரும் வரை தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்பாபுவுக்கு முன் ஜாமீன் வழங்கிவிட்டால் அவர் துபாய் சென்றுவிடுவார் என காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மோகன்பாபுவுக்கு முன் ஜாமீன் வழங்க தெலுங்கானா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்