வீர தீர சூரன் 2 : இந்த படத்தின் கதையை விக்ரமுக்கு எழுதவில்லை - இயக்குனர் அருண்குமார்
சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.;

சென்னை,
'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகின. இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அருண்குமார், வீர தீர சூரன் படத்தின் கதையை நான் விக்ரமுக்கு எழுதவில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது, "நான் கதையை விக்ரம் சாரிடம் விவரிக்கும் போது இந்த கதை உங்களுக்காக எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்து விட்டேன். பின்னர் படத்திற்கான முதல் 20 நிமிட கதையை அவரிடம் கூறினேன். அது அவருக்கும் பிடித்துவிட்டது. மீதமுள்ள கதையையும் எழுதிவிட்டு வாருங்கள், அதற்குள் நான் சித்தா படத்தை பார்த்து விடுகிறேன் என்றார்.
'சித்தா' படத்தை பார்த்த விக்ரம் உடனே என்னை தொடர்பு கொண்டு வீர தீர சூரன் படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று கூறினார். இந்த கதை இந்த உலகத்தில் இருந்தால் நல்லா இருக்கும் என்று அவரே நினைத்ததனால் எனக்கு படத்தின் மீதி கதையை எழுதவும், படத்தை சிறப்பாக இயக்கவும் மிகவும் எளிமையாக இருந்தது" என்று இயக்குனர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.