மேற்கிலிருந்து ஒரு புயல் வருகிறது: செயற்கை நுண்ணறிவு குறித்து வைரமுத்து பதிவு
செயற்கை நுண்ணறிவு குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
செயற்கை நுண்ணறிவு குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஒரு புயல் வருகையில் இருவினை புரியும். நட்ட மரங்களை வீழ்த்தும் காற்று வரும்; நாற்றுகள் நடப்பட மழையும் வரும். தூங்கும் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டும். மேற்கிலிருந்து ஒரு புயல் வருகிறது. செயற்கை நுண்ணறிவு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. முன்னிருந்த விழுமிய சமூகம் வீழவிருக்கிறது; முன்னில்லாத புதுயுகம் எழவிருக்கிறது.
அதன் தீமைதான் எண்ணற்பாலது. உலகின் 15 விழுக்காடு ஊழியர்கள் பணியிழக்கப்போகிறார்கள். வேலை இழப்போர் வீணிற் கழிவரோ? மானுடர்க்கு வேண்டுமே மாற்று ஏற்பாடு. அகில அரசுகளும், சர்வதேச சமூகங்களும் இந்த உலகப் பெரும்புயலை எதிர்கொள்ள உத்தியும், புத்தியும் தயாரிக்குமா? ''எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்'' இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.