'அனிமல் படத்தில் அவர்..' - ராமராக ரன்பீர் கபூர் நடிப்பது பற்றி பேசிய சக்திமான் நடிகர்
ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிப்பது பற்றி முகேஷ் கன்னா பேசியுள்ளார்.
சென்னை,
சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 90-களில் பல எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த தொடர் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முகேஷ் கன்னா, ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிப்பது பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ராமராக நடிக்கும் நடிகருக்கு அந்த கதாபாத்திரத்திற்கு எதிரான வாழ்க்கை இருக்கக்கூடாது. ரன்பீர் கபூர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய வாழ்க்கையும் ராமருக்கு எதிரானது என்று சொல்லக்கூடியது அல்ல. அவர் சமீபத்தில்தான் அனிமல் என்ற படத்தில் நடித்திருந்தார். அதில், அவருக்கு மிகவும் எதிர்மறையான ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இதை பாதிக்காது என்று நம்புகிறேன்' என்றார்.
நிதிஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக கன்னட நடிகர் யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகும்நிலையில், முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளியன்றும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியன்றும் வெளியாக உள்ளது.