வாழை திரைப்படம்: மாரி செல்வராஜுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-02 06:03 GMT

File image

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாழை'. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 23-ந் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு எனது அன்பின் வாழ்த்துகள்.

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்