'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.;
சென்னை,
'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் சிங்கிளான 'தீமா' பாடலும் வெளியாகி வைரலாகின.
முழுக்க முழுக்க காதல் கதை களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முடிக்க கால அவகாசம் தேவைப்படுவதால், இந்த படத்தை அடுத்த வருடம் கோடைக்காலத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.