'தி கோட்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
'தி கோட்' நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.;
சென்னை,
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜ்ய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் அவரது நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். தி கோட் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், அதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டநிலையில், நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்கி 5 காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.