சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாக உள்ளார்.;

Update: 2024-10-20 10:20 GMT

சென்னை,

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா, சின்னத்திரையில் 'அருவி', 'மவுனம் பேசியதே' போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் ஜோவிதா அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்திற்கு லிவிங்ஸ்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து லிவிங்ஸ்டன் கூறும்போது, ''நாடகங்களே சினிமாவுக்கு முன்னோடி. அதனால் தான் எனது மகளையும் சின்னத்திரை நாடகங்களில் நடித்து அனுபவம் பெற செய்தேன். இப்போது அவர் தேறிவிட்டதால், சினிமாவில் களமிறக்குகிறேன்.

இந்த படத்திற்கான கதையை 3 ஆண்டுகளாக எழுதி முடித்துள்ளேன். இது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்த்திடாத வித்தியாசமான கதையாக இருக்கும். 'சுந்தர புருஷன்', 'அறுவடை நாள்', 'காக்கிச்சட்டை' வரிசையில், நான் எழுதியுள்ள இந்த கதையும் நிச்சயம் வெற்றிபெறும்'', என்றார். மேலும் இது குறித்து ஜோவிதா கூறுகையில், ''என் தந்தையை போல நானும் சினிமாவில் நல்ல இடம் பிடிப்பேன். ரசிகர்களின் ஆதரவை வேண்டுகிறேன்'' என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்