'முபாசா: தி லயன் கிங்' படத்திற்காக மகன்களுடன் இணைந்து டப்பிங் பேசிய ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து'முபாசா: தி லயன் கிங்' படத்திற்கு இந்தியில் டப்பிங் பேசியிருக்கிறார்.
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 -ம் ஆண்டில் ஒன்றும், 2019-ம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது. இரண்டிலும் ஒரே கதைதான்.1994-ம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.
லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டு விலங்குகளின் மூலம் கடத்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சம்.
இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா : தி லயன் கிங் படம். பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. காட்டுக்கே ராஜாவான முபாசா கடந்து வந்த பாதையையும், அதன் சகோதரனான ஸ்காரையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தற்பொழுது படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இதன் இந்தி வெர்ஷனுக்காக ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டப்பிங் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசியிருக்கும் ஷாருக்கான், "அற்புதமான சகாப்தத்தைக் கொண்டு வனத்தின் அசைக்கமுடியாத அரசனாகத் திகழ்ந்த முபாசா தனது கிரீடத்தைத் தனது மகனான சிம்பாவுக்குக் கைமாற்றிக் கொடுக்கிறது. ஒரு தந்தையாக முபாசாவுடன் என்னை ஆழமாகத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது. டிஸ்னியுடன் இதற்காக இணைவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். என்னுடைய மகன்களான ஆர்யனும், ஆப்ரானும் கூட இந்தப் பயணத்தில் இணைகிறார்கள் என்பதால் எனக்கு இது ரொம்பவே ஸ்பெஷலானதுதான். அவர்களுடன் இணைந்து டிஸ்னிக்காக பயணிப்பது நிச்சயமாக அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும்!" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
'முபாசா: தி லயன் கிங்' திரைப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.