மீண்டும் இசை நிகழ்ச்சியில் இணையும் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி
மலேசியாவில் நடைபெறவுள்ள ஜி. வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் பாடவுள்ளதாக சைந்தவி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
ஜி. வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் பாடகியும் அவரது முன்னாள் மனைவியுமான சைந்தவி பாடவுள்ளார்.தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றவை.சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
விவாகரத்துக்குப் பின்பும் இருவரும் இணைந்து சார் படத்தில் 'பனங்கருக்கா' பாடலைப் பாடியிருந்தனர். இந்த நிலையில், டிசம்பர் 7 ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள ஜி. வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் பாடவுள்ளதாக சைந்தவி தெரிவித்துள்ளார். நிகழ்வில், இருவரும் இணைந்து பாடுவார்கள் என்றே தெரிகிறது.
இது தொடர்பாக பாடகி சைந்தவி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.விவாகரத்துக்குப் பின் இவர்கள் இணையும் மேடை என்பதால் இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. விவாகரத்துக்குப் பின்பும் தொழிலில் முதிர்ச்சியாக நடந்துகொள்கின்றனர். இது ஆரோக்கியமானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.