சினிமாத்துறையில் 8 ஆண்டுகளை நிறைவு செய்த ராஷ்மிகா மந்தனா
சினிமாத்துறையில் 8 ஆண்டுகளை நிறைவு செய்தநிலையில், ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாறியுள்ளார்.
இந்நிலையில், இன்று ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அடியெடுத்து வைத்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு ராஷ்மிகா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,
'8 வருடங்கள் திரையுலகில் நான் செய்த எல்லாவற்றுக்கும் உங்கள் அன்பும் ஆதரவும்தான் காரணம், நன்றி, "என்று பதிவிட்டுள்ளார். ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில், சாவா மற்றும் தாமா படங்களில் நடித்து வருகிறார்.