'புஷ்பா 2' கூட்ட நெரிசல் விவகாரம் - தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பெற்று வந்த சிறுவன் ஸ்ரீதேஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஐதராபாத்,
'புஷ்பா 2' பட நடிகர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு காண இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.
இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, ரசிகர்கள் பலர் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால், இருவரும் மூச்சுப்பேச்சின்றி சுயநினைவை இழந்தனர். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, ரேவதி உயிரிழப்பு சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்து, சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா மனு தாக்கல் செய்திருந்தார். ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து, அல்லு அர்ஜுன் சிறையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் உடல்நலம் குறித்து மிகுந்த கவலையுடம் இருப்பதாகவும், விரைவில் சிறுவன் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் ஸ்ரீதேஜா அனுமதிக்கப்பட்டிருந்தார். சிசிச்சையின் போது விட்டுவிட்டு காய்ச்சல் வந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா படம் பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே குடும்பத்தை சார்ந்த தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.