விஜய்யின் 'தி கோட்' படத்தில் அரசியலா?
நடிகர் விஜய் அரசியல் கட்சி தலைவரான பின் 'தி கோட்' படத்தில் நடித்துள்ளார் .;
சென்னை,
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். .ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள, இப்படத்தில் விஜயகாந்தின் ஏஐ தோற்றத்தை படக்குழுவினர் உபயோகித்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் இன்று இந்த படம் வெளியாகியது. இப்படத்தை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடுகிறார்கள். கட்சி தொடங்கிய பின் வெளியாகும் விஜய்யின் முதல் படம் என்பதால் 'தி கோட்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பின் வெளியான 'தி கோட்' படத்தில் விஜய் பயன்படுத்தும் காரின் நம்பரில் அரசியல் சொல்லி இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதாவது, இந்த படத்தில் 'டிஎன் 07 சிம் 2026' என்ற வண்டி எண் கொண்ட காரை நடிகர் விஜய் பயன்படுத்தி இருக்கிறார். அதில் இருக்கும் 'சிம் 2026' என்ற எண் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் அரசியல் சம்மந்தமான ஒரு சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் கட்சி தலைவரான பின் விஜய்யின் முதல் படம் என்பதால் காட்சிகளில் அரசியல் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு விஜய்யின் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.