ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெஸன்ஜர்' படத்தின் 2-வது பாடல் வெளியீடு
'மெஸன்ஜர்' படத்தின் 'ஒன் சைடா வளர்த்தேன்' என்ற பாடலை பாடகி சைந்தவி பாடியுள்ளார்.;
சென்னை,
கன்னிமாடம் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக், அடுத்து நடித்துள்ள படம், 'மெஸன்ஜர்'. பி.வி.கே பிலிம் பேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மனீஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இந்த திரைப்படத்திற்கு எம். அபூபக்கர் இசையமைத்திருக்கிறார்.
ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஸ்ரீராம் கார்த்திக், தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரது முகநூல் மெஸன்ஜரில் ஒரு பெண் தகவல் அனுப்பி அதை தடுக்கிறார். அவளுக்கு எப்படி, தான் தற்கொலை செய்ய போவது தெரியும்? அந்தப் பெண் யார்? என்பது கதை. பேன்டஸி காதல் கதையாக இது உருவாகியுள்ளது. பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அபு பக்கர் இசையமைத்துள்ளார். வெளியீட்டுக்குத் தயாராக உள்ள இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற 'வானமே இல்லா பறவையாய்..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை பாடலாசிரியர் தர்சன் எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெல்லிசையும் காதலும் கலந்த இந்தப் பாடல் இளம் தலைமுறை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. 'ஒன் சைடா வளர்த்தேன்' என்ற பாடலை பாடகி சைந்தவி பாடியுள்ளார்.