'வினேஷ் போகத்தின் துணிச்சலை யாராலும் பறித்துவிட முடியாது' - ஆலியா பட்

வினேஷ் போகத்தின் துணிச்சலை யாராலும் பறித்துவிட முடியாது என நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-08-07 22:21 GMT

மும்பை,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

வினேஷ் போகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது என காரணம் கூறப்பட்டு, போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார். அதே சமயம், வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ் போகட், நீங்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு உத்வேகம். உங்கள் துணிச்சலையும், தைரியத்தையும் யாராலும் பறித்துவிட முடியாது. வரலாறு படைப்பதற்காக நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை யாராலும் அகற்ற முடியாது!

நீங்கள் இன்று மனம் உடைந்து இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து நாங்களும் மனம் உடைந்துள்ளோம். ஆனால் நீங்கள் தங்கம், நீங்கள் இரும்பு! இந்த யுகத்தின் சாம்பியன்! உங்களைப் போல் யாரும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்