பிரச்சினை பணத்தில் இல்லை - நடிகர் ஜெயம் ரவி
தனக்கு பணத்தின் மீது பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது, பணம் இல்லை என்று வருத்தப்பட மாட்டேன் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்துள்ளார்.இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.
ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவிற்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவத் தொடங்கியது. அதன் பின்னர் "இருவரும் நண்பர்கள் தான். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் நுழையக் கூடாது" என்று தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி. அதைத்தொடர்ந்து ஆர்த்தியிடமிருந்து தனது இரண்டு மகன்களையும் மீட்டெடுப்பேன் என கூறியிருந்தார். பின்னர் தனது உடைமைகளை ஆர்த்தி இடம் இருந்து பெற்றுத் தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
ஆர்த்தி தன்னை டார்ச்சர் செய்ததாகவும், பத்து ரூபாய் செலவு செய்தாலும் அதற்கு கணக்கு கேட்பார் எனவும் கூறியிருந்தார். மேலும் தனது மாமியார் பண விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இந்த விவாகரத்தில் தனக்கு விருப்பம் இல்லை என கூறியிருந்தார். இவ்வாறு ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்றுள்ளதாகவும் தனது இருப்பிடத்தை அங்கு மாற்றி இருப்பதாகவும் தகவல் வெளியானது.
தற்போது நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில், "நான் சிறுவயதிலிருந்தே நிறைய பணத்தை பார்த்திருக்கிறேன். என் தந்தை சம்பாதித்த பணத்தை கட்டுக் கட்டாக கொண்டு வந்து கொடுப்பார். ஆனால் எனக்கு பணத்தின் மீது பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது. பணம் இல்லை என்று வருத்தப்பட மாட்டேன். பணம் இல்லையென்றால் என்ன? கை, கால் இருக்கு, நல்ல திறமை இருக்கு என்று தான் நினைப்பேன். மேலும் சினிமாவில் மக்கள் எனக்கு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அதற்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடே ஆகாது" என்று உருக்கமாக பேசியிருக்கிறார் ஜெயம் ரவி.